சேலம் / தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 31,575 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 33,148 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “காவிரி டெல்டா மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு 7,500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது” என்றனர்.