மேட்டூர் அணை திறந்தும் செங்கிப்பட்டி புதியகட்டளைமேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து சேர வரவில்லை

3 months ago 18

தஞ்சாவூர், அக்.1: மேட்டூர் அணை திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் செங்கிப்பட்டி புதிய மேட்டுகட்டளை வாய்க்காலுக்கு இதுவரை தண்ணீர் வராததை கண்டித்து வரும் 3ம் தேதி அனைத்து தரப்பு விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் உள்ளது . இதன் மூலம் 80 ஏரிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சேர்ந்த வயல்கள் சாகுபடிக்கு நீரை பெற்று வருகின்றன. சுமார் 20,000 ஏக்கருக்கு மேல் மேட்டுக்கட்டளை வாய்க்காலுக்கு வரும் தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டூர்அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை புதிய மேட்டுக்கட்டளை வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.புதிய மேட்டுக்கட்டளை வாய்க்காலுக்கு தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர்,

சட்டமன்ற உறுப்பினர் நீர்வளத்துறை (ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் திருச்சி) ஆகியோரை மூன்றுமுறை சந்தித்து கோரிக்கை வைத்தும், இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த ஆண்டும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாயம் பொய்த்துப்போனது. இந்த ஆண்டு தண்ணீர் இருந்தும் நிர்வாக குளறுபடியால் இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல், நாற்று போடாமல், விவசாயம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.இந்த கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் செங்கிப்பட்டி பகுதியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு விவசாயிகளும் வரும் 3ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணை திறந்தும் செங்கிப்பட்டி புதியகட்டளைமேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து சேர வரவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article