மேட்டுப்பாளையம் : குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அலுவலர்களாக பற்றாளர்களாக நியமித்து கூட்டங்களை நடத்த உத்தரவிட்டது.
அந்த வகையில் நேற்று மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இடையர்பாளையம் சுதந்திராபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காரமடை துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், பற்றாளருமான அனிதா தலைமையில் ஊராட்சி செயலர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, வருவாய், பள்ளிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு துறைகளின் சார்பில் உள்ள திட்டங்கள், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என ஒரு தரப்பினரும், நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் பற்றாளர் அனிதாவிடம் மனு அளித்தனர். இந்த கூட்டத்தில் குறிப்பாக நகராட்சியுடன் இணைக்க கூடாது என நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் வார்டு உறுப்பினர் உஷாராணி 3வது வார்டுக்கு உட்பட்ட துர்கா அவென்யூ, எம்ஜிஆர் நகர், பாலப்பட்டி, 4வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், அம்பேத்கர் நகர், வேடர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வன எல்லையை ஒட்டியுள்ளன. குறிப்பாக ஓடந்துறை எல்லை உப்பு பள்ளம் முதல் வேடர் காலனி தண்ணீர் தொட்டி வரை உள்ள பகுதிகள் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ளன.
இதில் நான்கில் மூன்று பங்கு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புமே ஆகும்.
இந்த பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுமானால் இலவச வீட்டு மனை, நூறு நாள் வேலை திட்டம், அரசால் இலவசமாக வழங்கும் ஆடு, மாடு, கோழி திட்டம் பாதிக்கப்படும். எனவே, இவ்விரு வார்டுகளையும் ஓடந்துறை ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என்றார்.
மேலும், மோத்தேபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ் பேசுகையில், ‘‘முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி உள்ள மோத்தேபாளையம், குத்தாரிப்பாளையம், வெள்ளி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேட்டுப்பாளையம் நகராட்சியின் பாதாள சாக்கடைத்திட்ட கழிவுநீரால் விவசாயம் கெட்டுவிட்டது. குடிதண்ணீர் பாழாகிவிட்டது.
இப்பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் மேலும் இதுபோன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனால் 50% அளவிற்கும் மேல் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க கூடாது. அப்படி இணைக்கும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்’’ என்றார்.
The post மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.