
சென்னை,
சிம்பு நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சிம்பு கண் கலங்கி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ' இந்த மேடையில் நான் என்னுடைய தந்தைக்கும் தாய்க்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், சின்ன வயதில் எல்லா பசங்களுக்கும் சாக்லேட் வாங்கி கொடுப்பார்கள், படத்திற்கு, கடற்கரைக்கு கூப்பிட்டு செல்வார்கள், விளையாட சொல்வார்கள் அல்லது படிக்க சொல்வார்கள்.
ஆனால், பிறந்ததிலிருந்து எனக்கு நடிக்க சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் . ஏன் இப்படி நம்மை கஷ்டப்படுத்துகிறார்கள், மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நான் மட்டும் ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் படிப்பு என்று இருந்தேன். அது ரொம்ப கஷ்டமாக இருந்தது.
ஆனால் இன்று 40 வருடங்கள் கழித்து, கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போது எல்லோரும் சிம்புக்கு பாட தெரியும் ஆட தெரியும் என்று சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு எல்லாம் காரணம் என்னுடைய அப்பா , அம்மாதான். நன்றி அப்பா, நன்றி அம்மா.
இன்று என்னுடைய அப்பாவை இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டாம் என்று சொன்னேன். ஏனென்றால், அவர் எமோஷனல் ஆகிடுவார் என்று நினைத்து சொன்னேன். ஆனால், நான் எமோஷனல் ஆகிவிட்டேன்' என்றார்.