மேடவாக்கத்தில் பெண் அழகுக்கலை நிபுணர் கத்தியால் குத்தி கொலை; கள்ளக்காதலனுக்கும் கத்திக்குத்து; கணவர் கைது

3 hours ago 3

வேளச்சேரி: மேடவாக்கத்தில் நேற்றிரவு கணவரை பிரிந்து, தனது 3 குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலருடன் சேர்ந்து வாழ்ந்த பெண் அழகுக்கலை நிபுணரை, அவரது முதல் கணவரே கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இதைத் தடுக்க வந்த கள்ளக்காதலனுக்கும் பலத்த கத்திக்குத்து விழுந்தது. அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் கணவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை திருவல்லிகேணி, எல்லீஸ் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவருக்கு மனைவி ஜோதி (27) மற்றும் ஜெகதீஷ், தனுஷ், ஹரிஷ் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது 3 மகன்களுடன் மேடவாக்கம், புதுநகர் 4வது குறுக்கு தெருவில் ஒரு வாடகை வீட்டில் ஜோதி தனியே வசித்து வந்துள்ளார். மேலும், மேடவாக்கத்தில் ஒரு தனியார் பியூட்டி பார்லரில் ஜோதி அழகுக்கலை நிபுணராக வேலைபார்த்து வந்துள்ளார்.

மேலும், அதே பகுதியில் வசிக்கும் கணவரின் அக்கா துளசியின் மருமகன் கிரீஷ் (எ) கிருஷ்ணமூர்த்தி (38) என்பவருடன் ஜோதி கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் முதல் கணவர் மணிகண்டன், தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வரும்படி ஜோதிக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு ஜோதி மறுத்து, கள்ளக்காதலர் கிருஷ்ணமூர்த்தியுடன் குடும்பம் நடத்திவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை ஜோதியை முதல் கணவர் செல்போனில் தொடர்பு கொண்டு, சபரிமலைக்கு சென்று வந்த பிரசாதத்தை 3 மகன்களுக்குத் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதை நம்பி பள்ளிக்கரணை பகுதிக்கு வந்த ஜோதியிடம் மணிகண்டன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமான ஜோதி, தனது முதல் கணவரை செருப்பால் அடித்துவிட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மேடவாக்கம் கூட்ரோடு அருகே மணிகண்டன் இருப்பதை அறிந்து, நேற்றிரவு 8.40 மணியளவில் தனது கள்ளக்காதலர் கிருஷ்ணமூர்த்தியுடன் பைக்கில் சம்பவ இடத்துக்கு ஜோதி வந்துள்ளார். அங்கு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான முதல் கணவர் மணிகண்டன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ஜோதியின் வயிற்றில் சரமாரி குத்தியுள்ளார். இதை தடுக்க வந்த கள்ளக்காதலர் கிருஷ்ணமூர்த்திக்கும் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, மணிகண்டனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த ஜோதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து, கள்ளக்காதலர் கிருஷ்ணமூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேடவாக்கம் போலீசார் கொலை உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கொலை செய்த முதல் கணவர் மணிகண்டனை கைது செய்து விசாரித்ததில், மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மணிகண்டனிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post மேடவாக்கத்தில் பெண் அழகுக்கலை நிபுணர் கத்தியால் குத்தி கொலை; கள்ளக்காதலனுக்கும் கத்திக்குத்து; கணவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article