சென்னை: சென்னை மெரினா வளைவு சாலை பகுதியில் அதிக அளவில் மீன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், துர்நாற்றம் வீசுவதாகவும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இப்பகுதி மீன் விற்பனையாளர்களுக்கென மாநகராட்சி சார்பில் நொச்சிக்குப்பம் பகுதியில் ரூ.15 கோடியில் 366 கடைகள் கொண்ட மீன் சந்தை கட்டப்பட்டது. இந்த நவீன மீன் சந்தையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.