மெரினா கடற்கரை இன்று முதல் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை

3 months ago 22

சென்னை: விமானப்படை தின அணிவகுப்பை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இன்று முதல் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் டிரோன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்த விமானப்படை முடிவு செய்துள்ளது. இந்த விமான சாகசத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையில், வருகிற 6ம் தேதி, சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிறப்பாக நடத்த விமானப்படை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானப்படை தலைவர், தலைமை செயலாளர், மாநில அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி இன்று முதல் 5ம் தேதி வரை மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியை இன்று முதல் வருகிற 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் தடையை மீறி யாரேனும் டிரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post மெரினா கடற்கரை இன்று முதல் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article