மெயின் டிராக்கில் செல்ல வேண்டிய ரயிலை லூப் லைனில் மாற்றியது எப்படி: மனித தவறா,தொழில்நுட்ப கோளாறா… டேட்டா லாகர் சொல்வது என்ன?

3 months ago 15

சென்னை: கர்நாடக மாநிலம் மைசூரூவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பாங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது. மெயின் தண்டவாளத்தில் செல்வதற்கான பச்சை சிக்னல் பாக்மதி விரைவு ரயிலுக்கு காட்டப்பட்டது. எனினும் அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து ஏன் விலகியது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் தரப்பில் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ரயில் இயக்கங்களை கட்டுப்படுத்தவும், ரயில் நிலையங்கள் மற்றும் சந்திப்புகளில் பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படும் முக்கியமான பாதுகாப்பு முறையை குறிக்கிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி இன்டர்லாக்கிங் சிஸ்டம் உள்ளது. ஒரு ரயில் மெயின் தண்டவாளத்தில் வருகிறது என்றால், சில நிமிடங்களுக்கு முன்பே அதற்கான சமிக்கை நிலையத்திற்கு வந்துவிடும். ஒரு ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது, மெயின் தண்டவாளங்களில் இடர்வுகள் இல்லை என்றால் பச்சை விளக்கு காண்பிக்கப்படும். இடர்வுகள் இருக்கும் பட்சத்தில் மஞ்சள் சிக்னல் போடப்படும்.

ரயில் நிறுத்தி வைத்து இயக்கப்படும். இதனையும் தாண்டி, மெயின் தண்டவாளத்தில் ரயிலோ அல்லது தண்டவாளத்தில் பிரச்னையோ இருந்தால் மாற்று கோணத்தில் லூப் சாலைகளில் கடந்து சென்றுவிடும். அதற்கான முழு பொறுப்பும் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் லோகோ பைலட் ஆகியோரையே சாரும். கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நான்கு தண்டவாளங்கள் உள்ளன. அதில் இரண்டு தண்டவாளங்கள் மெயின் தண்டவாளங்களாகவும், மற்ற இரண்டு தண்டவாளங்களில் ஒன்று மாற்றுத்தடமாகவும் மற்றொன்று லூப் லைனாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், லூப் லைனில் சரக்கு ரயில் நின்ற பகுதியில் விரைவு ரயில் வேகமாக மோதி இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மெயின் லைனில் செல்ல வேண்டிய ரயில் லூப் லைன் பக்கம் திரும்பியது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதில் முக்கியமான ஒன்று, இன்டர் லாக்கிங் சிஸ்டம் ஸ்டேஷன் மாஸ்டர் வசம் இருக்கும் பட்சத்தில் அதில் உண்மையாகவே தொழில்நுட்ப கோளாறு தான் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதெனும் அலட்சியப்போக்கால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதா என்பது விசாரணையில் தான் தெரியவரும். இதுகுறித்து ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் விபத்துகளுக்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என எளிதாக கூறமுடியாது. ஏனெனில், இன்டர்லாக்கிங் பிரச்னையால் விபத்து ஏற்பட்டது என்றால் அதனை டேட்டா லாக்கர் அதிகாரிகள் ஆய்வு செய்தால் உண்மைநிலை தெரியவந்துவிடும். பெரும்பாலும் இன்டர்லாக்கிங் அமைப்பில் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவுதான் என்றார்.

* கவரப்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவை தொடங்கியது
திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து ஏற்பட்ட கவரப்பேட்டை மார்க்கத்தில் ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் கவிழ்ந்த பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதன் பிறகு நேற்று கவரப்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவை தொடங்கியது. 24 மணி நேரத்திற்கு பிறகு நிஜாமுதீனில் இருந்து சென்னை வரும் ராஜதானி எக்ஸ்பிரஸ் கவரப்பேட்டை ெமயின் லைன் வழியாக சென்றது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் 10 கி.மீ வேகத்தில், 2 ரயில்கள் சென்ற பிறகு வழக்கம் போல் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். மேலும் கவரப்பேட்டை வழியாக சென்னை செல்லும் 2வது வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

* மீட்பு பணியில் தேசிய பேரிடர் படை மும்முரம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மைய சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்று கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயில் பெட்டி இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என 2 மோப்ப நாய்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிக்கு கூடுதல் வீரர்கள் தேவைப்பட்டால் அங்கு செல்லவும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

* கொள்ளையர்கள் அட்டகாசம்
பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து வந்து ரயில் விபத்தில் சிக்கிய வடமாநில இளைஞர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக உடைமைகளை விட்டுவிட்டு ஓடினர். இதை அறிந்த சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்கள், அவர்களின் லக்கேஜ்கள், செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். அவர்களில் சிலரை போலீசார் அடித்து துரத்தினர். 7 செல்போன்களும், 14க்கும் மேற்பட்ட லக்கேஜ்களும் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சம்பந்தமாக போலீசார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் குழுக்களாக சென்று விசாரணை நடத்தினர்.

The post மெயின் டிராக்கில் செல்ல வேண்டிய ரயிலை லூப் லைனில் மாற்றியது எப்படி: மனித தவறா,தொழில்நுட்ப கோளாறா… டேட்டா லாகர் சொல்வது என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article