30 வயதைக் கடந்தாலே பெண்கள் மெனோபாஸ் குறித்து பேசத் துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இதன் கலந்துரையாடல்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் இன்னமும் இதற்கான முழுமையான புரிதல் பல பெண்களிடம் இல்லை. 40ஐக் கடந்தாலே மெனோபாஸ் கால கட்டங்களுக்கான தயார்நிலை எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் எப்படி எதிர்கொள்ளலாம். விளக்கம் கொடுக்கிறார் 19 வருடங்கள் அனுபவம் கொண்ட மகளிர் மருத்துவர்டாக்டர். மீரா ராகவன் (Urogynaecologist, MBBS, MD (Obs & Gynae), DNB, MNAMS, DFFP, FRCOG ) ஒரு மகளிர் மருத்துவ நிபுணராக, மாதவிடாய் நிறுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் பல பெண்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இது ஒரு முக்கியமான காலகட்டம். ஆனால் பெரும்பாலும் இது பெண்களில் குழப்பமான மனநிலையைத்தான் உண்டாக்குகிறது. மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்லது பயப்பட வேண்டிய பிரச்னையோ அல்ல. இது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி. இருப்பினும் இது சில உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால்களைக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் காலம் வேறுபடும், அவர்களின் உடல் சார்ந்த மாற்றங்களும் வித்யாசப்படும். உங்களில் சிலர் குறைந்த பட்ச அறிகுறிகளுடன் இந்தக் கால கட்டத்தைக் கடந்து செல்வீர்கள், மற்றவர்கள் இந்தப் பயணத்தை மிகவும் சவாலானதாகக் காணலாம். எனினும் எந்தத் தயக்கமும், குழப்பமும் இல்லாமல் மாதவிடாய் நிறுத்தத்தைப் பற்றிய புரிதல், உடல் மீதான அக்கறைகளுடன் எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம்.
மெனோபாஸ் என்றால் என்ன?
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தின் முடிவு. உங்கள் மாதவிடாய் நிறுத்தப்படும் போது, உங்கள் கருப்பையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் உற்பத்தியும் குறைவதால் மெனோபாஸ் காலம் உண்டாகிறது. மெனோபாஸ் பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் நிகழ்கிறது. ஆனால் நேரம் மாறுபடலாம். நீங்கள் மாதவிடாய் இல்லாமல் தொடர்ந்து 12 மாதங்கள் கடந்துவிட்டால் மருத்துவத் தரவுகளின்படி மெனோபாஸ் அடைந்துவிட்டீர்கள் என அர்த்தம்.மெனோபாஸ் பெண்களில் பலருக்கும் முழு உடலையும் பாதிக்கும் ஒரு மாற்றமாக நிகழும். சில பெண்களுக்கு, உடல் வெப்ப மாறுபாடு, தூக்கமின்மை மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றுடன் இருக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது, சிலர் குறைவான அறிகுறிகளை எதிர்கொள்ளலாம் அல்லது எதுவுமே இல்லாமல் இருக்கலாம். எனது நோக்கம் உங்கள் உடலில் என்ன நடக்கிறது, என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் அதை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதைப்புரிந்துகொள்ள உதவுவதே.
என்னென்ன மெனோபாஸ் நிலைகள் உள்ளன?
*ப்ரீமெனோபாஸ் (Premenopaus): இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய நேரம் மற்றும் உங்கள் 40 வயதிலேயே தொடங்கலாம். இது உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்றதாகத் தொடங்கலாம், மேலும் உடலின் வெப்பநிலைகளில் மாற்றம், தூங்குவதில் சிரமம் அல்லது மனநிலை மாற்றங்கள் போன்ற மாற்றங்களை இக்காலத்தில் நீங்கள் உணரலாம். இந்த நிலை கணிப்பது கடினம் மற்றும் சில மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் நீடிக்கும்.
*மெனோபாஸ் (Menopaus): குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருந்தால் அந்த நிலை மெனோபாஸ் என வரையறுக்கப்படுகிறது. உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைவு, பெண்ணுறுப்பில் வறட்சி, மனநிலை மாற்றம், போன்ற பல அறிகுறிகள் இக்காலத்தில் தென்படும்.
*மாதவிடாய் நிறுத்தம்(Post Menopaus): இது மாதவிடாய் நின்ற பிறகான காலம். இக்காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் தொடர்ந்து நிகழும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மாதவிடாய் நின்ற காலத்தில் அதிகரிக்கும். 40ஐக் கடந்து மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் உண்டாகத் துவங்கினாலே தொடர்ந்து உடல் பரிசோதனைகள் அவசியம்.
மெனோபாஸ் காலங்களில் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நிற்கும் அனுபவம் வேறுபடும். ஆனால் பொதுவான அறிகுறிகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
*வெப்பநிலை ஏற்றம் மற்றும் இரவுநேர அதீத வியர்வை (Hot Flashes and Night Sweats)
இரவு நேரத்தில் திடீரென உடலின் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டு சூடாக உணரலாம். இவை காய்ச்சல் போல் இருக்காது. அதாவது கோடைகாலத்தில் இருக்கும் உடல் சூடு போல் சாதாரண காலநிலையிலேயே தோன்றும். இரவில் மட்டும் அதீத வியர்வை காரணமாக உங்கள் தூக்கம் தடைப்படும். இதனால் அடுத்த நாள் சோர்வாக உணர்வீர்கள், உடலின் சக்தி இழப்பு உண்டானது போன்ற நிலை ஏற்படலாம். எனவே இரவில் மெல்லிய காற்றோட்டமான உடைகள் அணிந்துகொள்வது அவசியம். ஏசி இருப்பின் பயன்படுத்தலாம்.அல்லது நல்ல காற்றோட்டமான அறைகளில் தூங்கலாம்.
*மனநிலை மாற்றங்கள் மற்றும் உணர்வுகளின் ஆரோக்கியம் (Mood Swings and Emotional Health)
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் எரிச்சல், கோபம், மனநிலை மாற்றங்கள், சில சமயங்களில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இது மிகவும் சாதாரணமான மாற்றம்தான் ஆனால் உங்கள் மாற்றங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாத காலங்களில் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெறுவதுஅவசியம்.
*பிறப்புறுப்பு வறட்சி மற்றும் அசௌகரியம்(Vaginal Dryness and Discomfort)
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், யோனி திசுக்கள் உலர்ந்து, உடலுறவின் போது வலியை உண்டாக்கும். இதற்கு லோஷன்கள், அல்லது பிறப்புறுப்பு ஈஸ்ட்ரோஜன் கிரீம்கள் போன்ற பிற சிகிச்சைகளுக்கு உங்கள் மகளிர் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். அதிகமான நீர் அருந்துதல், உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள் வதும் அவசியம்.
*தூக்கமின்மை (Sleep Disorders)
அதீத உஷ்ணம் மற்றும் வியர்வை காரணமாக கோடைகாலம் போல் ஆழ்ந்த உறக்கம் சில பெண்களுக்கு சவாலாக இருக்கும். இதற்கு படுக்கைக்கு செல்வதற்கான சரியான நேரத்தைத் தினமும் கடைப்பிடிக்கலாம். இரவில் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பது மற்றும் சீரான சுவாசப் பயிற்சிகள் மூலம் உடலை ஓய்வு நிலைக்குக் கொண்டு வரலாம்.
*எடை அதிகரிப்பு (Weight Gain)
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றைச் சுற்றி எடை அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் உள்ளன. ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடல்பயிற்சிகள் , நடைப் பயிற்சி மூலம் இதைச்சீராக்க முடியும்.
மெனோபாஸ் அறிகுறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆரோக்கிய பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது?
*ஆரோக்கியமான உணவு: கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள். பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகளில் சோயா முக்கிய அங்கம் வகிக்கிறது. இது எலும்பு களின் ஆரோக்கியத்திற்கும் உங்கள் ஹார்மோன்களை சமன் செய்யவும் உதவும். வழக்கமான உடற்பயிற்சி மனநிலை மாறுபாடு, எடை மேலாண்மை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடற்பயிற்சி தீவிரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்வது கூட போதுமானது.
*நீரேற்றம் மற்றும் தோல் பராமரிப்பு (Hydration and Skin Care)
நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். நல்ல மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்தலாம். தோல் வறட்சி மற்றும் பிறப்புறுப்பு வறட்சி மெனோபாஸ் காலத்தில் பொதுவாகக் காணப்படும் ஆரோக்கியப் பிரச்னைதான். தகுந்த லோஷன்கள், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் , பிறப்புறுப்புக்கான க்ரீம்கள் பயன்படுத்தலாம்.
*ஹார்மோன் மாற்று சிகிச்சை (Hormone Replacement Therapy (HRT) (HRT))
சில பெண்களுக்கு, HRT என்பது கடுமையான மெனோபாஸ் அறிகுறிகளைப் போக்க உதவும். நீங்கள் ஹார்மோன் மாற்று தெரபி குறித்து பரிசீலிக்கிறீர்கள் எனில் அது உங்களுக்கு சரியானதா, அவசியமா என்னும் முழுமையான ஆலோசனைகளைத் தகுந்த மருத்துவரிடம் பெற்று செய்துகொள்ளலாம்.
*மன அழுத்த மேலாண்மை (Stress Management)
பொதுவாகவே மாதவிடாய் காலத்திலேயே அதாவது 25 வயதைக் கடக்கும் போதே உங்களின் மனநிலை மாறுபாடுகள், மாதவிடாய் சுழற்சி காலங்களில் உங்களின் நடவடிக்கைகள் என நீங்களே தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதீத எரிச்சல், கோபம், இவற்றை உங்களால் கட்டு படுத்த முடிகிறதா என சுயப்பரிசோதனைகள் செய்து ஒருவேளை மற்ற பெண்களை விட உங்களிடம் அதிகமாக இருக்கிறது எனில் ஆரம்பத்திலேயே உங்களை நீங்களே கட்டுப்படுத்தும், அல்லது அமைதியாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளுக்கு பழக்கப்படுங்கள். மெனோபாஸ் சாதாரண மாதவிடாய் காலங்களைக் காட்டிலும் அதீத மனமாற்றம், கோபத்தைக் கொடுக்கலாம். எனவே துவக்க நிலை பயிற்சி அவசியம். யோகா, தியானம் அல்லது அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது கூட மன அழுத்தத்தைக் குறைக்கவும் உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக குடும்பங்களின் அக்கறையும், அவர்களின் ஆதரவும் மெனோபாஸ் காலங்களில் மிகவும் அவசியம்.
– ஷாலினி நியூட்டன்
The post மெனோபாஸ்… கவலை வேண்டாம்! appeared first on Dinakaran.