சென்னை, செப்.29: சென்னை
யில் மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய இணைப்பு சாலைகள் (லிங்க் ரோடு) அமைக்கப்படும் என்றும், இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக, சாலைகளின் இடையே மெட்ரோ துண்கள் மற்றும் சுரங்க பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, ராஜிவ்காந்தி சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் இடத்திற்கு ஏற்றப்படி ஒரு வழிபாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதிக வாகன நெரிசல்கள் உள்ள பகுதிகளான வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ‘யூ டர்ன்கள்’ மூடப்பட்டு குறுகளான சாலைகளில் சுற்றி வருவது போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மெட்ரோ பணிக்காக தடுப்பு வைக்கப்பட்டுள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய இணைப்பு சாலைகள் (லிங்க் ரோடு) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் பராமரிக்கப்படும் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த புதிய லிங்க் சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, அடையாறு ஆற்றின் அருகே உள்ள இசைக் கல்லூரி அருகே டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் துர்காபாய் தேஷ்முக் சாலையை இணைக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைக்க அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர். சாந்தோம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாந்தோம் நெடுஞ்சாலை போன்ற பல முக்கிய சாலைகளில் போக்குவரத்தை மாற்ற இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதேபோல், அண்ணாநகர் பகுதி மக்கள், ஜவஹர்லால் நேரு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வார்டு 104ல் உள்ள பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து வார்டு 90ல் உள்ள பாடி குப்பம் சாலையை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பணியால் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாடி குப்பம் சாலையில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு வரை 900 மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த இணைப்பு சாலை, மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். இந்த வாகனங்கள் ரயில் நகர் பாலத்தை கடந்து பூந்தமல்லி உயர் சாலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு appeared first on Dinakaran.