மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 230 இடங்களை பா.ஜ கூட்டணி அபாரமாக வென்றும் இன்று வரை ஆட்சி அமைக்க முடியவில்லை. கூட்டணிக்குள்ளே குழப்பம். முதல்வர் பதவியை துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிசுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கிறார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இந்த குழப்பம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நவ.26ம் தேதியுடன் முடிவடைவது தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயம் தெரியும். ஆனால் அரியானா, காஷ்மீர் தேர்தலுடன், மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலை ஆணையம் நடத்தவில்லை. காரணமும் சரியாக சொல்லவில்லை. காலம் தாழ்த்தி நவ.20ம் தேதி ஒரே கட்டமாக நடத்தியது. பா.ஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜ மட்டும் தனியாக 132 தொகுதிகளை கைப்பற்றியது.
பெரும்பான்மைக்கு தேவை 144. ஆனால் 12 இடங்கள் குறைவாக பா.ஜ பெற்றுவிட்டது. அதில் ஒன்றும் பாதிப்பு இல்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் பெற்றுள்ளன. எனவே எளிதாக கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்த்தால் அங்குதான் சிக்கல் வந்து சேர்ந்தது. மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிஸ்தான் காரணம். எனவே அவர் தான் முதல்வர் பதவிக்கு தகுதியான ஆள் என்று பா.ஜ முதலில் கொளுத்திப்போட்டது. ஆனால் முதல்வர் பதவியில் அமர்ந்து ருசி கண்ட சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பதவியை விட்டுக்கொடுக்க தயார் இல்லை. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையிலும் கூட புதிய முதல்வர் யார் என்பதை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியவில்லை.
அதற்குள் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. எனவே முறைப்படி முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்துவிட்டார். அரசியல்சாசன சட்டப்படி புதிய சட்டப்பேரவை அமைந்தாலும், ஒரு அரசு என்பது முதல்வர் பதவி ஏற்றதில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே புதிய முதல்வர் பதவி ஏற்காவிட்டால், மகாராஷ்டிராவில் இடைக்காலமாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2019 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த போதும் இதே நிலை நீடித்தது. பா.ஜவுக்கு முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே விட்டுக்கொடுக்காததால் 2019 அக்.24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியும், நவ.12ம் தேதி சட்டப்பேரவை பதவிக்காலம் முடியும் வரை புதிய அரசு அமையவில்லை. எனவே அப்போதைய கவர்னர், நவ.12 அன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார்.
எனவே இப்போதும் அதே போன்ற சூழல் அமையுமா அல்லது புதிய அரசு அமையுமா என்பதை பார்க்கவேண்டும். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எவ்வளவு தான் பிடிவாதம் பிடித்தாலும், இந்த முறை முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ தயாராக இல்லை. சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தான் என்பதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எழுந்துள்ள அரசியல் சூழலால் மகாராஷ்டிராவில் புதிய முதல்வர் பதவி ஏற்க முடியாமல் மெகா குழப்பம் நீடிக்கிறது.
The post மெகா குழப்பம் appeared first on Dinakaran.