நன்றி குங்குமம் தோழி
கூட்டம், கூட்டம், கூட்டம்… எங்கு பார்த்தாலும் மனிதர்களின் கூட்டம். ஒரு விடுமுறை தினமாக கிடைத்தால் போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த நிலப்பரப்பில் போக முடிந்த அத்தனை இடங்களுக்கும் செல்கிறார்கள். சைவமோ, அசைவமோ எந்த ஹோட்டலாக இருந்தாலும் அங்கும் கூட்டம். தியேட்டர் வாசலில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம். துணிக்கடையாக இருந்தாலும் சரி, தங்கத்தின் விலை கூடிக்கொண்டே இருந்தாலும் சரி அங்கேயும் கூட்டம். சுற்றுலாத் தலங்கள் எல்லாம் டிராபிக் தடைபடுகிற அளவிற்கு கூட்டம். இவை எல்லாவற்றையும் மீறி தற்போது ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் கூட்டம். உண்மையில் இம்மாதிரியான கூட்டம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்வியாக தற்போது இருக்கிறது.
உதாரணத்திற்கு, பொதுவெளியில் மக்களிடம் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. இன்றைக்கு அத்தனையும் மக்களின் பொழுதுபோக்கு என்ற பெயரில் தலைகீழாக மாறியிருக்கிறது. திரைப்படம் பார்க்கச் சென்ற இடத்தில் கூட்டநெரிசலில் சிக்கி மரணம், ஆன்மீகக்கூட்ட நெரிசலில் சிக்கி மரணம், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு என்ற தகவல்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. இவை எல்லாவற்றிக்கும் காரணம் Fear of Missing Out (FOMO) என்கிறது உளவியல் ஆய்வு.
Fear of Missing Out (FOMO) இந்தியாவில் பத்தில் எட்டு பேர் என்கிற ரீதியில் இந்த FOMOவால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது உளவியல் ஆய்வு. ஏனென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி நேரம் சோசியல் மீடியாவில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர். அதனால், மற்றவர்கள் அனுபவிக்கும் பொழுதுபோக்கான விஷயங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் அனுபவிக்காமல் தவற விடுகிறோமோ என்கிற பயமும், பதற்றமும் தற்போதைய சமூகத்தில் மனிதர்களை அதிகமாக பாதிக்கப்பட வைக்கிறது.
உதாரணத்திற்கு, மொபைலில் சார்ஜ் இல்லையென்றால், உடனே பதற்றமாகி விடுகிறார்கள். மொபைல் ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ, அதற்கான பணம் இல்லையென்றாலோ அதற்கும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, கடன் வாங்கியாவது ரீசார்ஜ் செய்யுமளவிற்கு நடவடிக்கைகள் மாறியிருக்கின்றன.சமூகத்தில் மனிதர்களின் எண்ணங்களும், நடவடிக்கைகளும் அவர்களையும், அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்காத அளவிற்கு இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒழுங்காக, காலம் காலமாக இருக்கிறது. ஆனால், இந்த சோசியல் மீடியாவின் தாக்கத்தில் மனிதர்களின் எண்ணங்களும், நடவடிக்கைகளும் சமூகத்தையும் பதற்றமடைகிற அளவிற்கு மாற்றியிருக்கிறது.
விடுமுறை என்றால் ஏதாவது சுற்றுலா தளத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறது. சோசியல் மீடியாவில் கொண்டாடப்படும் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோவில் எந்த விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்கி, படத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மீறி, முதன் முதலில் தான் மட்டும்தான் இந்த செயலைச் செய்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக அட்வென்சர் மாதிரியான செயல்களைக்கூட செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு, தடை விதிக்கப்பட்ட சுற்றுலா இடங்களில், யாருக்கும் தெரியாமல் சென்று, தான் மட்டும் அந்த இடத்தை பார்த்து விட்டேன் என்று செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றுகிறார்கள். சிலர் தாங்கள் உடுத்தும் உடைகளில் இருக்கும் டிசைனில் இருந்து, பைக் மாடலில் இருக்கும் டிசைன் வரை காப்பி ரைட் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வேறு யாரும் அந்த டிசைனை பயன்படுத்தி விடக்கூடாது என்கிற அளவிற்கு தனித்துவம் என்ற வார்த்தைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.
ஒருசிலர் எல்லாம் சோகமாக இருக்கிறேன் அல்லது கடுப்பாக இருக்கிறேன் என்பதற்காக பொருட்களை அள்ளிக் குவித்து விடுவார்கள். அதாவது, அந்த பொருள் அவர்களுக்கோ அல்லது அவர்
களின் வீட்டிற்கோ தேவையோ, தேவையில்லையோ, தன்னுடைய உணர்வுகளின் தன்மைக்கேற்ப பொருளை வாங்கிக் குவித்து வைப்பதில் ஒருவித நிம்மதி கிடைக்கிறது என்கிறார்கள். அப்படி பொருளை வாங்கிய பின்னும், அவர்களுக்கான மன அழுத்தமும், வெறுமையும் அடுத்து ஒருசில தினங்களிலோ அல்லது ஒருசில வாரங்களிலோ மறுபடியும் உருவாகி
விடுகிறது என்கிறார்கள்.
இப்படியாக அவர்கள் மனதை சீராக்க பணத்தை செலவழிப்பதாக இருக்கட்டும், ஊர் ஊராக சுற்றுவதாக இருக்கட்டும், கூட்ட நெரிசலில் சென்று அவதிப்படுவதாக இருக்கட்டும், இவற்றின் மூலம் கிடைக்கும் வித்தியாசமான அனுபவங்களை மற்றவர்களிடம் கூறுவதே அவர்களுக்கு அந்நேரத்திற்கான பெரிய அங்கீகாரம் போல் எடுத்துக் கொள்கிறார்கள். சமூக ஊடகத்தில் வரும் கமெண்ட்களின் எண்ணிக்கை, அதில் கிடைக்கின்ற லைக்ஸ், இவற்றை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இதனால் படிப்பிலோ வேலையிலோ அவர்களால் கவனம் செலுத்த முடியாமல், அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அந்த பிம்பமே வாழ்நாள் முழுவதும் வரும் என்ற அளவிற்கு நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். சோசியல் மீடியாவில் தனக்கு இத்தனை ஃபாலோவர்ஸ் என்றும், அதனால்தான் ஒரு மீடியா செலிபிரிட்டி என்றும் நம்பும்போது, அதனால் உருவாகும் அங்கீகாரமே போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது வெறும் மாயை என்று சொன்னால் போதும், உடனே பதட்டமாகிற அளவிற்கு தங்களை தாழ்த்திக் கொள்கிறார்கள்.இந்த FOMOவின் பாதிப்பால், மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகள் மாறுகின்றன.
இதனால் குடும்ப உறவுகளிலும், அலுவல் ரீதியான உறவுகளிலும் பெரிதளவில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. அதன்பின் அனைவரையும் விட்டு விலகி, தனிமையாகி மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். மனிதனின் மனதையும், உலகின் எல்லையையும் கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கிறது. அதனால் மனிதனின் கற்பனைகளையும், எண்ணங்களையும் டிஜிட்டல் வளர்ச்சியின் துணையோடு போட்டி போட்டு இயற்கைக்கு சவால் விடுகிறார்கள். அது மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.மனிதனின் உடலின் ஆரோக்கியத்திற்கும், மனதின் ஆரோக்கியத்திற்கும் இடையே விரிசல் விழ ஆரம்பித்தால், வாழ்வதே சிரமம் ஆகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும்,
எத்தனை பெரிய புகழ்பெற்ற மனிதராக இருந்தாலும் உலகத்திலுள்ள அனைத்தையும் அனுபவிக்க முடியாது என்கிற தெளிவு முதலில் வர வேண்டும்.
நிதானமாக இருக்கும் போது மட்டுமே, சின்னதாக ஒரு விஷயம் நாம் செய்திருந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியும். சோசியல் மீடியாவிற்காக அல்லது சமூகத்தில் நாம் மட்டும் தனித்துவமானவர் என்கிற ரீதியிலும் செயல்பட ஆரம்பித்தால், அது தனிமையை மட்டுமே பரிசாக கொடுக்கும். அதிலிருந்து உங்களை நீங்களே மீட்டுக் கொண்டு வரத் தெரியாமல், உங்களை நீங்களே தொலைத்து விடுவீர்கள் என்கிறது உளவியல் ஆய்வு.Fear of Missing Out என்பது தனிநபர் பிரச்னையல்ல… அதுவொரு சமூகப் பிரச்னையாக மாறியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு விழிப்புணர்வு கொடுக்க வேண்டுமென்பது இன்றைய தேவையாக இருக்கிறது.
மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி
The post மூளையின் முடிச்சுகள் – சோசியல் மீடியாவின் ஆதிக்கம்! appeared first on Dinakaran.