மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்திகள், மூன்று தலமரம்!

8 hours ago 1

நாகை மாவட்டத்தில், கிழக்குக் கடற் கரையோரம் அமைந்த திருத்தலம், திருவெண்காடு. இத்தலத்திற்கும் மூன்று என்ற எண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இத்தலத்தில் சூரிய தீர்த்தம்,சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களில் நீராடி முறையே இத்தலத்து மூர்த்திகளை வழிபடுபவர்களுக்குப் பிள்ளைப் பேறு கிட்டும். திருஞானசம்பந்தப் பெருமான், இந்த திருவெண்காட்டு முக்குள நீர், தோய் வினையார் (மூழ்கி வழிபடுவோர்) அவர் தம்மைத் தோயாவாம் தீவினை, பேய் அடையாது. (பிடித்திருந்தால் விலகியோடும்) பிள்ளையினோடு, உள்ள நினைவு (வேண்டிய) வரங்களைப் பெறுவர் என்கின்றனர். இத்தலத்தில், மூன்று மரங்கள் தலமரமாக உள்ளன. அவை ஆலமரம், கொன்றை, வில்வம் என்பனவாகும். இங்குள்ள ஆலமரம் அட்சய வடம் என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டுக் கயாவில் அட்சயவடத்திற்கு இணையாக இது போற்றப்படுகிறது. கயாவில் அட்சய வடத்தின் கீழ் விஷ்ணு பாதம் இருப்பதைப் போல், இங்கு ருத்ர பாதம் உள்ளது. இதில் பிதுர்களுக்குத் தர்ப்பணம் செய்தால் அவர்கள் சிவலோகம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும்.இத்தலத்தில், வெண்காட்டீசர் என்னும் சிவலிங்கமூர்த்தி, அகோரர் என்னும் உக்ர மூர்த்தி, ஆதி சிதம்பரேசர் என்னும் ஆனந்தத் தாண்டவ நடராசர் ஆகிய மூன்று மூர்த்திகள் உள்ளனர். அம்பிகை, அகோர காளி, துர்க்கை, பிரம்மவித்யா ஆகிய மூன்று கோலங்களில் காட்சி தருகிறாள். மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்தி, மூன்று தலமரம் என மும்மையால் பொலியும் திருத்தலமாக திருவெண்காடு திகழ்கிறது.

மும்முகலிங்கம்

சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை ஓயாது இயற்றும் காலகாலனாக இருக்கின்றார். அவர் அந்தச் செயல்களைச் செய்வதைக் குறிக்கும் வகையில், மும்முகலிங்கமாகக் காட்சியளிக்கின்றார். இத்தகைய மும்முகலிங்கத்தைத் திருவக்கரை என்னும் தலத்தில் காண்கிறோம். பொதுவாக, லிங்கங்களை முகலிங்கங்களாக அமைப்பவர்கள், லிங்கத்தின் பாணப்பகுதியில் ஒற்றை முகம் அல்லது நான்கு திசைகளை நோக்கிய நான்கு முகங்களைக் கொண்டவை களாகவே அமைத்துள்ளனர். ஆகமங்கள் கூறியிருந்த போதிலும், மூன்று முகங்களை அமைக்கும் வழக்கம் இல்லை. அதனால் திருவக் கரையிலுள்ள மூன்றுமுகலிங்கம், சமய உலகின் அரியப் படைப்பாகத் திகழ்கிறது. மூன்றுமுகங்களும் சிவபெருமானின் சத்யோஜாதம், அகோரம், வாமதேவர் ஆகிய முகங்களைக் குறிக்கின்றன.திருவக்கரை தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம். திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிப் பரவிய தலம். திண்டிவனத்திலிருந்து – வானூர், மயிலம் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் சாலையில் பயணித்துப் பெரும்பாக்கம் என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் 5 கி.மீ. பயணித்தால் திருவக்கரையை அடையலாம். சங்காரபரணி ஆற்றின் தென்கரையில் ஊரும், அந்த ஊருக்கு நடுவே கோயிலும் அமைந்துள்ளன.கருவறையில், மும்முகலிங்கமாகப் பெருமான் விளங்குகிறார். சந்திரன் வழிபட்டால் இந்நாளில், சந்திரசேகரேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். நடைமுறையில் சந்திர மௌலீசுவரர் என்னும் பெயர் வழங்குகிறது. அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை என்பதாகும்.சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரும் வழிபட்ட தலம். இந்த மூவர் பெயராலும் அமைந்த தீர்த்தங்கள் இங்கே உள்ளன. இந்த முச்சுடர் தேவர்களுக்கும் அருளும் மும்முக லிங்கமாய்ப் பெருமான்
எழுந்தருளியுள்ளார்.

The post மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்திகள், மூன்று தலமரம்! appeared first on Dinakaran.

Read Entire Article