முழுவீச்சில் புதுவை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி: இம்மாத இறுதிக்குள் முடிக்க முடிவு

1 month ago 4

புதுச்சேரி: புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் புதுப்பித்து கட்டும் பணி ரூ.29 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜூலையில் தொடங்கியது. அதே இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், மத்திய பகுதிகளில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்தது. கட்டுமானம் தடையின்றி, சிரமமின்றி நடக்க நீண்ட இழுபறிக்குப்பின் கடந்த ஜூன் 16ம் தேதி கடலூர் சாலை ஏஎப்டி மைதானத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டு, அங்கு தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன்பிறகு, புதிய பேருந்து நிலையத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் 31 கடைகள், உணவகம், டிக்கெட் புக்கிங் ஆபீஸ், போக்குவரத்து அலுவலகம், விசாரணை அலுவலகம், சிசிடிவி கண்காணிப்பு அறை, டைமிங் அலுவலகம், நிர்வாக அலுவலகம், பாலூட்டும் தாய்மார் அறை, 3 வெயிட்டிங் ஹால், ஏசி காத்திருப்பு அறை, மின்சார அறை, காப்பக அறை உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 46 பேருந்துகள் நிறுத்த முடியும். அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு, 32 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பேருந்து நிலையத்தின் இடதுபுறத்தில் இருசக்கர, கார் பார்க்கிங், ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடம் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சுவர், ஒரு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் 33 மின்விளக்கு கம்பங்கள் மற்றும் மத்தியில் உயரமான ஹைமாஸ் மின்கம்பம் நடும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

பேருந்து நிலையத்தின் தரைதளம் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் நுழைவுவாயில்களில் இரும்பிலான வளைவுகள் அமைக்கும் பணி நடக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்கினாலும் பணிகள் முடிவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும் என தெரிகிறது. ஆனால், மழை காலம் தொடங்கி விட்டதால் தற்காலிக பேருந்து நிலையம் சேறும், சகதியுமாக ஆகி விடுவதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க புதுச்சேரி நகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், தீபாவளிக்கு பிறகு அதாவது இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து, நவம்பர் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தெரிகிறது.

The post முழுவீச்சில் புதுவை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி: இம்மாத இறுதிக்குள் முடிக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article