
கான்பெர்ரா,
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகள் காலேவிலும், ஒருநாள் போட்டிகள் கொழும்புவிலும் நடைபெறுகின்றன.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரின் போது முழங்கையில் காயமடைந்தார்.
இதனால், எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடரில் விளையாடவில்லை என்றால் ஆஸ்திரேலியா கேப்டனாக டிராவிஸ் ஹெட் செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது.