முறையற்ற வர்த்தக நடவடிக்கை புகார்.. மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம்!!

2 hours ago 2

ஐரோப்பா: மெட்டா நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறி ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்து ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. 2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இதனிடையே மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சேவையை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால், தவறான நடைமுறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்தநிலையில், பேஸ்புக் சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும் வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்தது. இதுபற்றி 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது. அதன் விசாரணையில் இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது ரூ.7.120 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆனால், போட்டியாளர்களும், வாடிக்கையாளர்களும் எவ்வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.

The post முறையற்ற வர்த்தக நடவடிக்கை புகார்.. மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம்!! appeared first on Dinakaran.

Read Entire Article