முறைகேட்டில் ஈடுபட்ட சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

12 hours ago 2

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் தாக்கல் செய்த வழக்கில், ''என் கணவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் உள்ளார். சிறையில் அவர் வேலை செய்வதற்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்கவில்லை'' என்று கூறியிருந்தார்.

அதேபோல தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து மனுதாரர் தரப்பு வக்கீல் புகழேந்தி வாதம் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறை முறைகேடு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ''சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நியாயமான விசாரணை நடந்து வருகிறது'' என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ''தவறு செய்தவர்களை திருத்துவதற்காகத்தான் சிறைக்கு அனுப்பிவைக்கிறோம். ஆனால் அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரவேண்டிய சிறைத்துறை அதிகாரிகளே குற்ற செயலில் ஈடுபட்டால் என்ன செய்வது? இந்த விவகாரத்தில் தவறு செய்த சிறை உயர் அதிகாரிகள் உள்பட அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக இடைநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினர்.

பின்னர், ''இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவாகவும், தீவிரமாகவும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை குறித்து வருகிற ஏப்ரல் 4-ந் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்யவேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read Entire Article