சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெரியார் குறித்து பல்வேறு கருத்துகளை கூறினார். தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். மொழியையே இழிவாக பேசும் போது அப்புறம் என்ன சமூக மாற்றம். சீர்த்திருத்தம், அரசியல் இருக்கிறது. அடிப்படையே தவறாக உள்ளது. கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவரை எதிரி என்றீர்கள். திருப்பி பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி.
மதுவுக்கு எதிரான போராட்டத்தில்? ஆயிரம் தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார். அவரை பகுத்தறிவாளி என்று சொல்கிறார்கள். நான் ஒரு விவசாயி. என்னுடைய தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை. இவ்வளவு தானே. அதற்காக மரத்தை வெட்டி சாய்த்தால் அது பகுத்தறிவா?. கள் இறக்க என்னுடைய தோட்டத்தில் அனுமதி இல்லை என்று தான் அறிவுள்ளவன் சொல்வான். சமூக நீதிக்கும், பெரியாருக்கும் சம்பந்தம் உண்டா?. சமூக நீதியை போராடி பெற்று தந்ததவர் ஆனைமுத்து தான்.
உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசினார். மேலும் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். இது சர்ச்சையான நிலையில், சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். மேலும் சீமான் மீது சென்னை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வடலூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பேசுவது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.