சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பங்கேற்க சென்றார்.
அப்போது அவருக்கு சமூக பாகுபாடு காட்டுப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடத்தப்பட்ட விமான தளத்திற்கு செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஆகம விதிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் காரணமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பாஜ முன்னாள் தலைவர் தமிழிசையை குடமுழுக்கு விமானதளத்தில் இருக்கை போட்டு அமர வைத்துள்ளனர். குடமுழுக்கு நேரத்தில் கொடியசைக்கும் நிகழ்விலும் செல்வப்பெருந்தகை புறக்கணிக்கப்பட்டுள்ளார். சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு, அரசின் நோக்கத்தை சிதைத்துள்ள நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்:
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் எம்எல்ஏவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
* வல்லக்கோட்டை கோயில் விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்தார்: செல்வப்பெருந்தகை டிவிட்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எனது இல்லத்தில் என்னை சந்தித்தார். திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோயிலில், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார்.
நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்தும் முதல்வரின் நற்பெயருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் இச்சம்பவம் குறித்து எந்தவித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். மேலும், இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இதுகுறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக சக்திகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.