முயற்சி நிறைந்த வாழ்க்கை வெற்றியை தரும்!

6 months ago 19

தனது பட்டத்து யானையின் எடையை அறிந்து கொள்ள ஆசைப்பட்டார் ஒரு மன்னர். அந்த காலத்தில் எடைமேடைகள் இல்லை. யானையை அளக்கும் அளவு பெரிய தராசும் கிடையாது. அமைச்சர்கள், தளபதிகள் யாருக்கும் யானையின் எடையை எப்படி கணிப்பது எனப் புரியவில்லை. அப்போது தலைமை அமைச்சரின் 10 வயது மகன் நான் இந்த யானையின் எடையை சரியாக கனித்து சொல்கிறேன் என்றான். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். மன்னர் வியப்புடன் அவனை அழைத்து சிறுவனை! உன்னால் எப்படி இயலும்? என்று கேட்டார். அவன் தன்னம்பிக்கையுடன் என்னால் முடியும் என்றான்.”அவன் சொல்லும் படி செய்க” என்று மன்னர் ஆணையிட்டார்.அங்கே இருந்த நதிக்கரைக்கு யானையை அழைத்து வரச் சொன்னான் அந்தச் சிறுவன். அங்கிருந்து மிகப்பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் சற்றே அமிழ்ந்தது.அந்த வலிமையான மிகப்பெரிய படகு. உடனே அவன் தண்ணீர் நனைந்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். அதன் பிறகு யானையைப் படகிலிருந்து இறக்கி,பெரியப் பெரிய கற்களை படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்கு படகு தண்ணீரில் மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டன. இப்போது அந்தக் கற்களை கொஞ்சம் கொஞ்சமாக தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கச் சொன்னான். கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திப் பார்க்கப்பட்டுமொத்த எடையும் கணக்கிடப்பட்டது.இதுதான் அந்த யானையின் எடை என்றான் அந்த சிறுவன். மன்னர் அவனது அறிவு ஆற்றலை பாராட்டி பரிசுகள் தந்தார். எல்லோரும் யானையை மொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். அது எப்படி எடை காண்பது என திகைத்தார்கள்.ஆனால் அந்த சிறுவன் பல எடைகளின் மொத்த கூட்டுத்தொகை மூலம் எடைக் கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும்,அதை சின்ன சின்ன செயல்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு செயலையும்செவ்வனை செய்து முடிக்க வேண்டும் . அப்போது ஒட்டுமொத்த திட்டமும் அழகாக நிறைவேறிவிடும். முயற்சிகள் நிரம்பிய வாழ்க்கையை யார் மேற்கொள்கின்றார்களோ அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணி சொல்லலாம்.இந்தியாவிலேயே மிக இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரியாக உருவாகி சாதித்து உள்ளார் ஒரு பெண்மணி.அதுவும் இப்போது அல்ல.. சரியாக 24 வருடம் முன்பே ஐஏஎஸ் ஆகிவிட்டார்.. வெறும் 23 வயதில் இந்தியாவின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக உருவாகி தொடர்ந்து பணியாற்றி 24 வருடத்தில் தெலுங்கானாவின் 12 துறையில் பணியாற்றி அனுபவம் பெற்று உள்ளார். ஐஏஎஸ் ஆக ஆசைப்படுவோர் அவரது வெற்றி கதையை பாருங்கள்.அவ்வளவு எளிதாக ஐஏஎஸ் அதிகாரியாகவோ, ஐபிஎஸ் அதிகாரியாகவோ ஆகிவிட முடியாது, அதற்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்து கரைத்து குடித்திருக்க வேண்டும்.இதுதவிர எந்த விருப்ப பாடத்தை தேர்வு செய்கிறார்களோ, அதில் இவர்களுக்கு தெரியாத விஷயங்களே இருக்கக்கூடாது. முழுமையாக ஆத்மார்த்தமாக படித்து சரியான பயிற்சி மேற்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். கல்வி என்ற ஆயுதம் மூலம் யார் மிக மிக துல்லியமாக இலக்கை நோக்கி பயணிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், யார்,மிக குறைவாக தவறுகளை செய்கிறார்களோ அல்லது தவறு செய்யாமல் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், என்ற பணிகளுக்கான யுபிஎஸ் தேர்வு என்பது பலருக்கும் மிகப்பெரிய கனவு. அதனை அடைவதற்கு கல்வி தான் ஆயுதம். கடின உழைப்பு தான் மிகப்பெரிய நம்பிக்கையான வார்த்தை. ஏனெனில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பலரும் இரண்டு அல்லது மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போவதை பார்க்க முடிகிறது.1977ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஸ்மிதா சபர்வால். பிரணாப் தாஸ் மற்றும் புரபி தாஸ் ஆகியோரின் மகள் ஆவார். ஹைதராபாத் நகரில் மிகப்பிரபலமான பகுதியான செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.அதன்பின்னர் ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.தனது வாழ்வில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற இலக்கை இளம் வயதிலேயே தீர்மானித்தார். அதன் பிறகு யுபிஎஸ்சி தேர்வை பற்றி தெரிந்து கொள்வதற்காக நூலகம் நூலகமாகச் சென்று கூடுதலான தகவல்களை திரட்டினார். அதுமட்டுமல்ல கூடுதலான திட்டமிடலுடன், கூடுதலான முயற்சியும்,கூடுதலான பயிற்சியும் மேற்கொண்டார். ஆனாலும் முதல் முயற்சியில் தோல்வி அடைத்தார். இருந்தபோதும் மனம் தளரவில்லை விடாமுயற்சியும்,தொடர் பயிற்சியும் மேற்கொண்டார். அதன் பலனால் ஸ்மிதா சபர்வால் 2000 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் அகில இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

ஐஏஎஸ் பணியில் அர்ப்பணிப்பு,ஈடுபாட்டுடன் பணி ஆற்றியதால் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் ‘‘மக்கள் அதிகாரி” என்று மக்களால் போற்றப்படுகிறார்.வாரங்கல், விசாகப்பட்டினம், கரீம்நகர் மற்றும் சித்தூர் உட்பட ஒருங்கிணைந்த ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார்.இவருடைய சிறப்பான பணியை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் அலுவலகத்தில் ஸ்மிதா சபர்வால் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா முதல்வரின் அலுவலகத்தில் செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா சபர்வால் தற்போது தெலுங்கானா நிதிக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். நமது வாழ்க்கையை முயற்சி நிறைந்த வாழ்க்கையாக மாற்றினால் மட்டுமே வெற்றி வசப்படும் என்பது ஸ்மிதா சபர்வால் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

The post முயற்சி நிறைந்த வாழ்க்கை வெற்றியை தரும்! appeared first on Dinakaran.

Read Entire Article