புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுப்பதாக அவர் கூறினார்.
அப்போது பேசிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தின்கீழ் கையெழுத்துபோட வந்த தமிழ்நாடு அரசு கடைசி நேரத்தில் யூடன் அடித்தது. பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது' என்றார்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான், தெரிவித்தார்.
பின்னர் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:- "மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியதில்லை. தமிழ்நாடு எம்.பி.க்களையும், தமிழ்நாடு மக்களையும் நாகரீகமற்றவர்கள் என மத்திய கல்வி மந்திரி கூறியது புண்படுத்துகிறது. மத்திய கல்வி மந்திரிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று கூறினார்.