திருச்சி: மும்மொழி கொள்கை என்பது இந்தி திணிப்பு முயற்சி தான். இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான், தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாஜ தவிர அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. கல்வியாளர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் (பொ) ராஜேந்திரன்: மும்மொழி கொள்கையை காரணம் காட்டி, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பதை ஏற்க இயலாது. தமிழகத்தின் மீதான ஒன்றிய அரசின், அரசியல் காழ்ப்புணர்ச்சியை இது காட்டுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தாமதம் இன்றி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயலாளர் கிட்டு: ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கல்வி சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கான நிதியை தமிழக அரசு வேறு வருவாயிலிருந்து தற்போது சரி செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கல்வி திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒன்றிய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி: ஒன்றிய அமைச்சர் தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். பாரபட்சமின்றி, கல்விக்கான நிதி ஒதுக்கீடை ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிட வேண்டும். கல்விக்கான ஒன்றிய அரசு நிதி ரூ.2,151 கோடி விடுக்கப்பட்டாததால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் கிராமப்புற பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும். இவ்வாறு நிதியை வழங்க தொடர்ந்து மறுத்தால் ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவோம்.
திருச்சி அரசு கல்லூரி பேராசிரியர்கள்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுவது போல் நாடு முழுவதும் ஒரே மொழியை கொண்டு வரும் மறைமுக முயற்சி இது. இந்தியா முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்க திட்டமிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மும்மொழி கொள்கை என்பது இந்தி திணிப்புதான் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்: ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை appeared first on Dinakaran.