மும்பையில் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடிய மக்கள்

2 days ago 4

மும்பை,

2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. நிதி தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரவேற்க நேற்று இரவு கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், கிர்காவ் கடற்கரை, தாதர் சிவாஜிபார்க், ஜூகு கடற்கரை, மலாடு தத் மார்வே, வெர்சோவா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாய் திரண்டனர். இதற்காக அங்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் புத்தாண்டை வரவேற்க ஆர்வமுடன் கடற்கரைகளில் குவிந்தனர்.

நள்ளிரவு 12 மணி ஆனவுடன் பட்டாசு வெடித்தும், 'ஹேப்பி நியூ இயர்' என பலத்த சத்த மிட்டும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் கைகளை கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பாந்திரா மலைமாதா தேவாலயம் உள்ளிட்ட சர்ச்களில் கூட்டம் அலைமோதியது. தமிழ் கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதேபோல பபுல்நாத் சிவன் கோவில், மகாலட்சுமி கோவில், பிரபாதேவி சித்தி விநாயகர் ஆலயம், மும்பா தேவி கோவில் போன்ற வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி நேற்று ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிக கட்டணத்தை பொருட்படுத்தாமல் மக்கள் பங்கேற்று ஆடிப்பாடி தங்கள் புத்தாண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மும்பைக்கு மேற்கு மற்றும் மத்திய ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. புத்தாண்டை கொண்டாடிவிட்டு மக்கள் நள்ளிரவு தாண்டியும் வீடு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மும்பை ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நகரம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தால் மக்கள் உற்சாகத்தில் திளைத்த வேளையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக இருந்தனர். இதற்காக நகர் முழுவதும் சுமார் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மக்கள் கூடும் பொது இடங்கள் முக்கிய சாலைகள், சந்திப்பு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். கலவர தடுப்பு போலீசார், அதிவிரைவு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையின ரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read Entire Article