
மும்பை,
மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன்கள், பாரா கிளைடர்கள் மற்றும் ஏர்பலூன்கள் போன்றவற்றை பறக்கவிட தடை விதித்து மும்பை போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இந்த தடை உத்தரவு ஏப்ரல் 4-ந்தேதி(நாளை) முதல் மே 5-ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மும்பை காவல்துறையின் வான்வழி கண்காணிப்பு பிரிவின் அனுமதி பெறாமல், மும்பை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள், பாரா கிளைடர்கள் ஆகியவற்றை பறக்கவிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.