
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஒன்று மட்டும் நிச்சயமாக கூறுவேன், இந்த போட்டியில் ஆடுகளம் நன்றாக இருந்தது. எனவே, நம்மால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பதை தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன்னர் எங்களுக்கு வேறு வகையான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது என்ன மாதிரியான ஆடுகளம் வழங்கப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு விளையாட முடிவு செய்துள்ளோம்.
மிட்செல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் போது மிடில் வரிசை வீரர்களுக்கு சாதகமாக அது அமைகிறது. எனவே, நாங்கள் எப்போதும் போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறோம். எங்களுக்கு கிடைத்த தொடக்கம் எங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறது மனதளவில் இன்றைய தினம் எங்களுக்கு கடினமாக இருந்தது. மும்பை அணியும் சிறப்பாக செயல்பட்டது அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனால், நாங்கள் இன்றைய போட்டியில் தைரியமாக வென்று காட்டினோம். ஷர்துக் தாகூர் ஒரு அற்புதமான வீரர் என்று சொல்ல வேண்டும். அவர் எங்களுக்கு கிடைத்தது ஒரு அற்புதமான தேர்வு. அவரை நாம் ஆதரிக்க வேண்டும். திக்வேஷ் எங்கள் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர். ஒரு இளம் வீரர் அப்படி செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.