
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 31 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் சிராஜ் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 61 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த வடிவத்தில் பவுலர்கள் கேம் சேஞ்சர்களாக இருக்கிறார்கள். நம்மில் பலரும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் பந்துவீச்சாளர்களும் போட்டியை வென்று கொடுக்கிறார்கள்.
இந்த போட்டியில் எங்களது சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். அதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் இந்த மைதானத்திற்கு ஏற்ப ஷாட்களை விளையாடியதாக உணர்கிறேன். வாஷிங்டன் சுந்தரும், நானும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தோம்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வேண்டியது. ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகளால் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்ததாலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இன்றைய போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனிலேயே வாய்ப்பு கொடுக்க நினைத்தோம்.
அதேபோன்று அவரும் பேட்டிங்கில் மிகச்சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பந்துவீச்சில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.