*வார்டு பங்கீடு இழுபறியால் திடீர் முடிவு
மும்பை : மும்பை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணியில் உள்ள அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிடும் என கூறப்படுகிறது. அதே போல பாரதிய ஜனதாவும் தனித்து போட்டியிடும் என்று முதல் அமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் சூசமாக தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பிரதான கட்சியான சிவசேனாவும் தனித்துப்போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா தலைமையில் மகாயுதி கூட்டணி ஆட்சி செய்கிறது. அஜித் பவார் கட்சியும், ஷிண்டே சிவசேனாவும் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக செயல்படுகிறது. இதே போல மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சரத் பவார் கட்சி மற்றும் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகள் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியாக செயல்படுகின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. கடந்த மகாயுதி கூட்டணி ஆட்சியில், சிவசேனாவை உடைத்துக் கொண்டு வந்து பாஜவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி தரப்பட்டது. பாஜ தலைவர் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். பின்னர், ஓராண்டு கழித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தபோது, முதல்வர் பதவியை விட்டுத்தர ஷிண்டே மறுத்து விட்டார். இதுவே முதல்வர் பதவியை முடிவு செய்ய இழுபறி ஏற்பட்டதற்கு காரணம். இருப்பினும், பாஜ மேலிட தலையீட்டாலும், தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளை தொடர்ந்தும் முதல்வர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ஏற்றார். துணை முதல்வர்களாக ஷிண்டேயும், அஜித்பவாரும் ஏற்றனர். பின்னர் அமைச்சரவை ஒதுக்கீட்டிலும் பிரச்னை நீடித்தது. அதிலும் பின்னர் சுமூக தீர்வு காணப்பட்டது.
இதனிடையே, இனி வரும் அனைத்து தேர்தலிலும் மகாயுதி கூட்டணி கட்சிகள் இணைந்தே போட்டியிடும் என பாஜ, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மும்பை மாநகராட்சியை பிடிக்க கட்சிகளிடையே கடும் போட்டி காணப்படுகிறது. இந்த நிலையில் மும்பை உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுகின்றன. இதேபோல பாரதிய ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அஜித் பவார் கட்சி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதாவும் தனித்து போட்டியிடும் என்று முதல் அமைச்சர் பட்நவிஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். சாம்பாஜிநகர், ஷீரடியில் மாநில பாரதிய ஜனதாவின் நிர்வாகிகள் மாநாடு நடந்தது. அதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பட்நவிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பட்நவிஸ் பேசும் போது, உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடக் கூடும் என சூசகமாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் இன்னமும் 3 அல்லது 4 மாதங்களில் மும்பை உள்ளிட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கலாம். உள்ளாட்சி மன்றங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், அநேகமாக மே மாதம் இந்த தேர்தல் நடைபெறலாம்.தேர்தலுக்கு பாரதிய ஜனதாவினர் தங்களை தயார் செய்ய வேண்டும். உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடக் கூடும். ஆனால் மகாயுதி கூட்டணி கட்சியினரின் மனங்களை காயப்படுத்தும் படி யாரும் எதுவும் பேசக் கூடாது. இவ்வாறு பட்நவிஸ் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா தனித்து போட்டியிடக் கூடும் என்றும் பட்நவிஸ் சூசகமாக தெரிவித்த அதே நேரத்தில் அஜித் பவார் கட்சியும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான கட்சிகளில் பாஜவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, சிவசேனாவும் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வார்டுகளை பங்கீடு செய்வதில் உடன்பாடு காணப்படாமல் சிக்கல் நீடிப்பதாகவும், இதுவே தனித்துப் போட்டியிடுவதற்கு காரணம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், அஜித்பவார் தனது கட்சியை பலப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனால் தான் அவர் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளார் எனவும் கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.
The post மும்பை மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி? appeared first on Dinakaran.