மும்பை,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்னுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது
நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து இதுவரை 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,
டேரில் மிட்செல் கொடுத்த கேட்சை பிடிக்க ஓடிய போது, பந்துக்கு அருகிலாவது செல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். அதேபோல் எனது கைகளில் பந்து சிக்கினால் எப்போதும் விட்டதில்லை. அதனால் நம்பிக்கையுடன் கைகளை நீட்டி முயற்சித்தேன். அந்த கேட்சை பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கேரம் பாலை பொறுத்தவரை, இந்தப் போட்டியை இரண்டாக பிரித்து கொள்ளலாம். பெவிலியன் முனையில் இருந்து பந்துவீசும் போது பந்து நன்றாக சென்றது.
ஆனால் மறுமுனையில் இருந்து பவுலிங் செய்யும் போது வித்தியாசமாக சென்றது. கொஞ்சம் பிளாட்டாக சென்றது. பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதனை கணித்த போது, வேறு மாதிரி பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தேன். அந்த முனையில் இருந்து பவுலிங் செய்தால், பேட்ஸ்மேன்களால் என்னை எளிதாக விளாச முடியும் என்றும் நினைக்க வாய்ப்புகள் இருந்தது. இருந்தாலும் அதனை முயற்சிக்க விரும்பினேன்.
அந்த முனையில் இருந்து பவுலிங் செய்தால் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுக்க நேரிடும். ஆனால் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு ரன்னும் ஆட்டத்தை நிர்ணயிக்கும். அதனால் கேரம் பாலை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடிந்தது. கேரம் பாலை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். அதேபோல் மும்பை பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் இல்லை. வழக்கத்திற்கும் குறைவாக ஸ்லோவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.