குன்னூர்: இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும், இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி சாதனை புரிந்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவ.28) கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: “நீலகிரி மாவட்டத்தில் எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டிலேயே முதன்மையான இந்தப் பயிற்சி கல்லூரியில் 26 நாடுகளை சேர்ந்த 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அந்த அதிகாரிகளின் அனுபவத்தை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.