
புதுடெல்லி,
இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.
இந்த சூழலில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கின. மேலும் இந்த மாநிலங்களில் தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டதால், பல இடங்களில் சைரன் ஒலிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இருநாடுகளும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால், தற்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக முப்படை தளபதிகளும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க, அவரது இல்லத்திற்கு வந்தனர்.
மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளநிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமரின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.