வாஷிங்டன்,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலத்தில், ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
அவர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரையும் விட்டுவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது. அவர்களை பூமிக்கு பத்திரமாக மீட்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனிடையே விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்தபடியே வாக்களித்தார்.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இவற்றில், சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது, உடல்நிலை குறித்து அவர் கூறியதாவது:
நான் அதே உடல் எடையுடன் தான் இங்கு உள்ளேன். என் உடல்நிலை சீராக உள்ளது. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.சர்வதேச விண்வெளி நிலையத்தில் மைக்ரோ கிராவிட்டி உள்ளதால், உடலில் ஏற்படும் வழக்கமான மாற்றங்கள் காரணமாக எடை குறைந்தது போல் தெரிகிறது. என் உடல்நிலையை தற்காத்துக்கொள்ள, தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். பளு துாக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் என்னை வலிமையாக்கி உள்ளன. முன்பை விட தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலையில் எந்தவிதமாற்றம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.