டேராடூன்: முத்தலாக்கிற்கு எதிராக போராடிய பெண்ணுக்கு மீண்டும் மகளிர் ஆணைய துணை தலைவர் பதவி வழங்கி உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு, மாநிலத்தின் உதம் சிங் நகரில் அமைந்துள்ள காஷிபூரில் வசிக்கும் சாய்ரா பானுவை உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணைய துணைத் தலைவராக நியமித்துள்ளது. இவர் 2017ம் ஆண்டு முத்தலாக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு 2018ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முத்தலாக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்தது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் ஆதரவாளராக இருந்து வரும் சாய்ரா பானுவுக்கு தற்போது மாநில மகளிர் ஆணைய துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் திரிவேந்திர அரசிலும், கடந்த 2020 அவருக்கு மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவராக சாய்ரா பானு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காஷிபூரை சேர்ந்த சாய்ரா பானோ, பிரயாக்ராஜைச் சேர்ந்த ரிஸ்வான் அகமதுவை 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2015ம் ஆண்டு கணவர் ரிஸ்வான், தனது மனைவிக்கு முத்தலாக் அறிவித்தார். அதன்பிறகு 2016ம் ஆண்டு தனது கணவரின் முத்தலாக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின்னரே சாய்ரா பானு பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மகளிர் ஆணைய துணை தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி, முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு சாய்ரா பானு நன்றி தெரிவித்துள்ளார்.
The post முத்தலாக்கிற்கு எதிராக போராடிய பெண்ணுக்கு மீண்டும் மகளிர் ஆணைய துணை தலைவர் பதவி: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.