சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், தொழில் முதலீடுகளுக்கு அனுமதி, டாஸ்மாக் கடைகள் குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28ம் தேதி மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, தமிழக அமைச்சரவையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அதேபோல், செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், எஸ்.எம்.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சரவையில் இணைந்தனர். பொன்முடி உள்ளிட்ட 6 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டன.
இந்நிலையில், புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய அமைச்சர்களுக்கு துறை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அறிவுரை வழங்கப்பட உள்ளன. அதேபோல், அண்மையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது உலகின் முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டன.
இதில், சில நிறுவனங்கள் உடனடியாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இருப்பதால் அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி அளிப்பது தொடர்பாகவும், தற்போது, தமிழகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுப்பதும் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இதுதவிர, தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது, மாநிலத்தின் நிதிசார்ந்த திட்டங்கள்; அதற்கு வர வேண்டிய நிதி குறித்தும் கூட்டத்தில் பேச வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி வேண்டும் என்ற பலதரப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தற்போதுள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து 500 கடைகளை குறைக்க முடிவெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.