காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.
திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். மேலும், ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தினை தொலைபேசி வாயிலாக, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 044 – 2226 2023 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்ப்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.