முதல் முறையாக புதிய சட்டப்படி தேர்வாகிறார் தலைமை தேர்தல் ஆணையர்: சீனியாரிட்டி நடைமுறை கிடையாது

3 weeks ago 8

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய சட்டப்படி, முதல் முறையாக தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட உள்ள விவகாரம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் பொறுப்பு வகிக்கும் தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதில் ஆணையர்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து கடந்த 2023 மார்ச் 2ல் உத்தரவிட்டது. புதிய சட்டம் இயற்றும் வரை இக்குழு நீடிக்கும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதில், தேர்வுக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

அது தொடர்பாக மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதற்கிடையே, மக்களவை தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா செய்தார். அதே சமயம், மற்றொரு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றார். இவர்களுக்கு பதிலாக ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக முதல் முறையாக புதிய சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அடுத்த மாதம் 18ம் தேதி 65 வயதை எட்டி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பிறகு புதிய தலைமை தேர்தல் ஆணையர் முதல் முறையாக புதிய சட்டத்தின்படி தேர்வு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.  முந்தைய நடைமுறைப்படி அரசின் பரிந்துரை பேரில் ஜனாதிபதியால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். மரபுப்படி, மூத்த தேர்தல் ஆணையர் தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெறுவார்.

இதன்படி தற்போதைய இரு ஆணையர்களில் மூத்தவர் ஞானேஷ் குமார். இவருக்கு, 2029 ஜனவரி 26 வரை பதவிக்காலம் உள்ளது. ஆனால் புதிய சட்டத்தில் இதுபோன்ற சீனியாரிட்டி நடைமுறை கிடையாது. சட்ட அமைச்சர் தலைமையிலான தேடல் குழு 5 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்யும். இப்பட்டியல், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர், ஒன்றிய அமைச்சர் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படும்.

அவர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்வார்கள். அதே சமயம், தேடல் குழு பரிந்துரைக்காத வெளிநபரையும் தேர்வுக்குழு நியமிக்கும் அதிகாரமும் உண்டு. இவ்வாறு புதிய தலைமை தேர்தல் ஆணையர் சீனியாரிட்டி முறையில் இல்லாமல் முதல் முறையாக தேர்வு செய்யப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், ஒன்றிய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post முதல் முறையாக புதிய சட்டப்படி தேர்வாகிறார் தலைமை தேர்தல் ஆணையர்: சீனியாரிட்டி நடைமுறை கிடையாது appeared first on Dinakaran.

Read Entire Article