
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி புலவாயோவில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 167 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி வியான் முல்டெரின் அபார சதத்தின் உதவியுடன் (147 ரன்கள்) 82.5 ஓவர்களில் 369 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 18.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன் அடித்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் எர்வின் (49 ரன்கள்), மசகட்சா (57 ரன்கள்) மற்றும் முசரபானி (32 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 66.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.