சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (21-ந் தேதி) காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பின்னர், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.
21-ந் தேதி மாலை காரைக்குடியில் நடைபெறும் தி.மு.க. கட்சி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அன்றிரவு அவர் காரைக்குடியில் தங்குகிறார். மறுநாள் 22-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த விழாவில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முன்னதாக அவர் கள ஆய்வை மேற்கொள்கிறார். பின்னர் மதுரைக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி விமானநிலையத்துக்கு செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி முதல்-அமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.