
மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டின் மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு புள்ளிவிவரமே சாட்சி என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதல்-அமைச்சர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப் புள்ளிவிவரமே சாட்சி.
தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
நம் முதல்-அமைச்சரின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் ' என தெரிவித்துள்ளார்.