முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்.. பயன் பெறுவோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு: அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

1 month ago 4

சென்னை: முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 69 மாணவிகளுக்கு ஊக்கத்தொகையினை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 69 மாணவ மாணவிகளுக்கு ஆணைகளையும், இரண்டு நபர்களுக்கு பாரதி இளங்கவிஞர் விருது மற்றும் தலா ரூ.1 இலட்சம் ஊக்கத்தொகையினையும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் வழங்கினார்.

முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பாரதி இளங்கவிஞர் விருது வழங்கும் திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைக்கான ஆணைகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் இன்று கல்லூரிக் கல்வி இயக்கக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

மாணவச் செல்வங்கள் படிப்பதற்கு, சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதே முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக் கொள்கையாகும். கல்வியும் சுகாதாரமும் தனது இரண்டு கண்களாக பாவித்து முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார்.கல்வி ஒன்றே யாராலும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத பெரும் சொத்து, எனவே மாணவ மாணவிகள் அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் (Chief Minister Research Fellowship) 30.08.2022 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் முதலைமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் ஆராய்ச்சித் திறமையை மேம்படுத்துவதும், புதிய கண்டுப்பிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த ஊக்கத்தொகை பெற மாநில அளவில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தகுதித் தேர்வு மூலம் 120 மாணவ மாணவிகளை தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டு மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்கப்படுத்தும் வகையில், 120 என்ற எண்ணிக்கை தற்போது மாண்புமிகு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் மட்டுமல்லாமல், அரசு உதவிபெறும் மற்றும் மாநிலப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.25,000/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. கலைப்புலத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10,000/- வீதமும், அறிவியல் பாடப்பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.12,000/- வீதமும், கூடுதலாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.2,000/- இதரச் செலவினத் தொகையாக (Contigency) வழங்கப்படுகின்றது.

முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத் தகுதிதேர்வு மூலம் தெரிவுசெய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்குத் தமது திருக்கரங்களால் “முதலமைச்சர்“ ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்ட ஆணையினை 22.08.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் 25 மாணவர்களுக்கு மாதம் ரூ. 25,000/- முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கும் ஆணைகளையும், 44 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக பெறுவதற்கான செயல்முறை ஆணைகளும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தேர்வு பெறும் மாணவர்கள் தமிழ்நாடு இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மாண்புமிகு முதலமைச்சரின் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலன் கருதி இந்தியப் பிரதமருக்கு நேற்று அளித்த கடிதத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (Economically Weaker Section) வருமான உச்சவரம்பு 8 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டதுபோல், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.2.5 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.

துணை முதலமைச்ர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ள ஏதுவாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், மிகச்சிறந்த ஆளமை மிக்க தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அறிஞர் பெருமக்கள், இசை மேதைகள் ஆகியோர்களின் நினைவுகளை போற்றிப் பெருமைப் படுத்துகின்ற வகையில், அரசின் சார்பில் நினைவகங்கள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள் ஆகியன திராவிட மாடல் அரசால் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகிறது.

நாடு காக்கவும், மொழி காக்கவும் உயிர் உடமைகள், உறவுகளை இழந்த தியாக சீலர்களை மதித்துப் போற்றும் மரபை வளர்த்துள்ள நெறி மகத்தானது. நாடு காக்கவும், மொழிக்காகவும் பாடுபட்ட பேரறிஞர்கள், பெருந்தலைவர்களுக்கு எழுப்பப்படும் சிலைகள் வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக ஊக்கமளிப்பதும் உண்டு என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழகம் எங்கும் தியாகிகளுக்கு கலைஞர் உருவாக்கிய நினைவுச் சின்னங்கள் எண்ணற்றவை. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரானவுடன் எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவு இல்லம் ஆக்கினார்கள். தியாகிகளைப் போற்றிய தியாகசீலர் கலைஞர்.

அவர் வழியில் தற்போது முதலமைச்சர் அவர்களால் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு கழக அரசின் சார்பில் ரூ.18 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு அன்னாரின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதை கருத்திற் கொண்டு அவர் புகழ் சேர்க்கும் வகையில் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாகக்’ கடைப்பிடிக்கப்படும்.

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும், மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘ பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்‌ என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி, மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவாகப் ”பாரதி இளங்கவிஞர் விருது“ வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கும் ஒரு மாணவிக்கும் தலா ரூபாய் ஒரு இலட்சம் ஊக்கத்தொகையினை வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025ஆம் ஆண்டிற்கு செல்வி ஏ.விக்னேஸ்வரிக்கும் செல்வன் மதிராஜாவுக்கும் “பாரதி இளங்கவிஞர் விருது” மற்றும் தலா ரூபாய் ஒரு இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை மதித்துப் போற்றுவதில் நம் முதலமைச்சர் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருவதற்கு இவ்விழாவே நல்உதாரணமாகும். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., மற்றும் கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் எ.சுந்தரவல்லி, இ,ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

The post முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்.. பயன் பெறுவோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு: அமைச்சர் கோவி. செழியன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article