முடிச்சூர் பகுதியில் நடைபெறும் பருவமழை முன்னேற்பாடு பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு: அதிகாரிகளுக்கு ஆலோசனை

1 month ago 5

தாம்பரம்: வடகிழக்கு பருவமழையின் போது புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் சூழும் பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூர் ஊராட்சி பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின்னர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையானது இந்த மாத இறுதியில் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல்வர் அறிவுறுத்தலின்படி அனைத்து துறை அதிகாரிகளும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மழை நீர் கால்வாயை தூர்வாரும் பணிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை மூலமாக பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் வெளியே செல்லும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் மூலம் கால்வாய் அடைப்புகளை நீக்கவும், தாழ்வான பகுதிகளில் நீர்தேக்கம் ஏற்பட்டால் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தவும் தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்த பகுதிகளில் தேவைப்படுகிறதோ அங்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது, பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் துவக்க பகுதியான முடிச்சூரில், நீர்வளத்துறை மூலம் பல்வேறு பெரிய பணிகள் நடைபெற்று வருகிறது. அருகில் கட்டன் கவர் கால்வாய் தயார் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக தண்ணீர் தேங்குவது குறைக்கப்படும். இதன்காரணமாக, கடந்த காலங்களை விட பாதிப்பு குறைவாக இருக்கும். இருந்தாலும் மழையின் அளவை பொறுத்து என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முடிச்சூர் பகுதியில் நடைபெறும் பருவமழை முன்னேற்பாடு பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு: அதிகாரிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article