பெங்களூரு,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில், இந்த தொடர் குறித்தும், இந்திய அணி குறித்தும் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒருவேளை இந்திய அணியில் யாரேனும் காயத்தை சந்தித்தால் அவர்கள் மற்ற அணிகளை போல பாதிப்படைவதாக தெரியவில்லை. ஏனெனில் அதே இடத்தை சமமாக நிரப்பக்கூடிய ஒருவர் தயாராக இருக்கிறார். யாரேனும் காயத்தை சந்தித்தால் அந்த இடத்தை நிரப்புவதற்காக இந்திய அணி நிர்வாகம் அழைக்க ஏராளமான வீரர்கள் உள்ளனர்.
அந்த வீரர்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்கள். அந்த வகையில் இந்திய அணியினர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய, நிறைய அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ளனர். மேலும் இந்திய அணியினர் விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்ட் காரணமாக அவர்களை இங்கே எதிர்கொள்வது மிகவும் கடினமாகும். இதுவே எங்களுக்கு இங்கே காத்திருக்கும் சவாலாகும். இவ்வாறு அவர் கூறினார்.