முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் வரிசைகட்டி வருவதால் திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விற்பனை ஜோர்

2 months ago 6

* மகசூல் குறைவால் விலை கிடுகிடு, கிலோ ரூ.62 முதல் ரூ.70க்கு விற்கப்படுகிறது

திருத்தணி: முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் வரிசைகட்டி வருவதால் திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்று வட்டாரப் பகுதியில் தேங்காய் விற்பனை படுஜோராக நடக்கிறது. மகசூல் குறைவால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் ரூ.62 முதல் ரூ.70க்கு விற்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு, கொசஸ்தலை ஆற்றின் கரை பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை மர தோப்புகள் வைத்துள்ளனர்.

தென்னை மரங்களுக்கு நீராதாரம் மிகவும் அவசியம் என்பதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களான சொரக்காய்பேட்டை, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம், குமாராஜூபேட்டை, திருமல்ராஜூபேட்டை, சானாகுப்பம், பெருமாநல்லூர், அரவாசபட்டடை, வெளிகரம், வெங்கட்ராஜ்குப்பம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் தேங்காயை விட இளநீர் விலை அதிகமாக இருந்ததால், இளநீர் விற்பனை செய்து வந்தனர்.

இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் விலை முறையாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், தை மாதம் சுப முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் ஒன்றன்பின் ஒன்று வரிசை கட்டி வருவதால், தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய் விலை அதிகரித்துள்ளது. திருமணங்களுக்கு வருபவர்களுக்கு தேங்காய் பை வழங்குவது, திருவிழாக்கள், ஓட்டல்களில் தேங்காய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படுவதால், தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. திருத்தணி, நகரி, சோளிங்கரில் உள்ள தேங்காய் மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ தேங்காய் ரூ.62 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சில்லறை விற்பனையில் சிறிய ரக தேங்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.25க்கும், பெரிய தேங்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூஜைகளுக்கு மட்டுமின்றி, வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் தேங்காய் விலை உயர்வால், பெண்கள் தேங்காயை பயன்படுத்தி செய்யும் உணவு வகைகளை சமைப்பதை குறைத்துள்ளனர்.

விலை கிடுகிடு உயர்வால், சாதாரண மக்கள் தேங்காய் வாங்கி பயன்படுத்த பின்வாங்குகின்றனர். இதுகுறித்து, அனைத்து விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் லிங்கமூர்த்தி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக தென்னை சாகுபடியில் மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. சராசரியாக ஒரு மரத்துக்கு 150 முதல் 200 காய்கள் காய்க்கும். ஆனால், கடந்த ஆண்டு தென்னை மரங்களை நோய் தாக்கியதால், அதிக பட்சமாக 80 காய்கள் மட்டுமே மகசூல் வருகிறது.

இதனால், 1000 தேங்காய்களின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வியாபாரிகள் தென்னை மர தோட்டத்திற்கு வந்து முன்பணம் செலுத்தி காய்கள் அறுவடை செய்து, வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இளநீர் மகசூல் செய்யப்படுவதாலும், தேங்காய் காய்ப்பு மேலும் குறைய உள்ளதாலும், விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரி கணபதி கூறுகையில், 30 ஆண்டுகளாக தேங்காய் விற்பனை செய்து வருகிறேன். பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தென்னை தோப்புகளுக்கு சென்று விவசாயிகளிடம் தேங்காயை மொத்தமாக வாங்கி வந்து, வியாபாரம் செய்து வந்தேன்.

இந்த ஆண்டு தேங்காய் மகசூல் குறைந்து விலை அதிகரித்துள்ளதால், கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ மொத்த விற்பனையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்கிறோம். மரம் ஏறி தேங்காய் பறித்து வாகனங்களில் எடுத்து வந்து தேங்காய் தோல் உரிக்க ஒரு காய்க்கு ஒரு ரூபாய் கூலி ஆட்களுக்கு வழங்க வேண்டி உள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளது என்றார்.

* பயன்பாடு குறைப்பு
தேங்காய் விலை கிடுகிடு உயர்வால், ஓட்டல்களில் தேங்காய் சட்னி, தேங்காய் குருமா, சேர்வா போன்றவற்றை ஓட்டல் வியாபாரிகள் குறைத்து, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி போன்ற தேங்காய் தேவை குறைவான சட்னிகளை வாடிக்கையாளர்களுக்கு உணவில் சேர்த்து பரிமாறி வருகின்றனர். மேலும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு தேங்காய் பை வழங்குவது வழக்கமாக உள்ள நிலையில், தேங்காய் விலை உயர்வால், தேங்காய்க்கு பதில் வாழைப்பழம் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி வருகின்றனர்.

The post முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் வரிசைகட்டி வருவதால் திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Read Entire Article