முகவரி கேட்பதுபோல் நடித்து ஓட்டல் ஊழியரை வெட்டி பணம், செல்போன் பறிப்பு: 3 பேருக்கு வலை

3 months ago 15

வேளச்சேரி: முகவரி கேட்பதுபோல் நடித்து ஓட்டல் ஊழியரை கத்தியால் வெட்டி, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அடையாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (56). அதே பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, சம்பள பணத்துடன், சர்தார் படேல் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், அவரை வழிமறித்து, கோட்டூர்புரத்திற்கு செல்வதற்கு வழி கேட்டுள்ளனர்.

அவர் வழி சொல்லிக்கொண்டிருந்த போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கையில் வெட்டிவிட்டு, அவரது பாக்கெட்டில் இருந்த சம்பள பணம் ரூ.10,000 மற்றும் செல்போனை பறித்து கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பினர். பாதிக்கப்பட்ட பெருமாள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post முகவரி கேட்பதுபோல் நடித்து ஓட்டல் ஊழியரை வெட்டி பணம், செல்போன் பறிப்பு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article