
பெங்களூரு,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முகமது சிராஜின் பந்துவீச்சு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு வீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தபொழுதும் கூட அவரால் விக்கெட் கைப்பற்ற முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கியது.
மேலும் சமீப காலங்களாகவே அவரது பந்துவீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் முகமது சிராஜ் எது குறித்தும் கவலைப்படாமல் தொடர்ந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சக வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முகமது சிராஜ் புதியவர் கிடையாது, அவர் அனுபவமானவர். சில சமயங்களில் நாம் கவனம் செலுத்துகின்ற விஷயம் நடக்காது. தற்போது அவர் செய்ய நினைக்கும் விஷயங்கள் நடக்காத காலத்தில் இருக்கிறார். அவர் விக்கெட் எடுக்க விரும்புகிறார் ஆனால் நடக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் எட்ஜ் கேட்ச் ஆக மாறுவதில்லை.
இப்படியான சூழ்நிலை பந்துவீச்சாளர்களாகிய எல்லோருக்குமே வரும். ஆனால் இதற்கு நாம் விரக்தி அடைய தேவை இல்லை. அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அந்த இடத்தில் பந்து வீச வேண்டும். பிறகு நீங்கள் வெற்றி பெற தொடங்கியதும் உங்களை யாராலும் தடுக்க முடியாது.
கேப்டனாக ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சுதந்திரத்தை கொடுக்க கூடியவர். நான் அவர் தலைமையில் விளையாடிய பொழுது இதை உணர்ந்திருக்கிறேன். எனவே முகமது சிராஜுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நல்ல சுதந்திரம் கொடுப்பார். ஆகையால் முகமது சிராஜ் எது குறித்தும் கவலைப்படாமல் தொடர்ந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்