
சென்னை,
'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'ஹபீபி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி வழங்கும் 'ஹபீபி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
படத்தின் தலைப்பான, ஹபீபி என்பதற்கு அரபி மொழியில் அன்பு, காதல் என்று அர்த்தம். அதே போல 'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற திருக்குறள் வாசகமும் போஸ்டரில் இடம் பெற்று உள்ளது. ஆகவே மனிதர்களுக்கிடையேயான பாசம், அன்பு, காதலை, இஸ்லாமிய பின்னணியில் சொல்லும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படம் பற்றி மீரா கதிரவன் கூறும்போது, "இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதைச் சாத்தியப்படுத்த 20-வருடமாகி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.