மீன்,கோழி,மாடு,மரங்கள்…

3 months ago 15

தஞ்சை என்றால் நெல் விவசாயம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இப்போது தஞ்சை பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் பரவக்கோட்டையில் ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வரும் ரவிச்சந்திரன் மரம் வளர்ப்பு, மீன் வளர்ப்பு என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்து வருகிறார். அவரது பண்ணைக்கு சென்றிருந்தபோது நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார். “ எனக்கு சொந்தமாக 5.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 3 ஏக்கர் முழுவதும் தென்னை வைத்திருக்கிறேன். ஒரு ஏக்கர் தென்னைக்குள் ஊடுபயிராக எலுமிச்சை நட்டிருக்கிறேன். அதேபோல் செம்மரம், தேக்கு, வேங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்களை 8 வருடங்களுக்கு முன்பு நடவு செய்தேன். இன்றைக்கு அவைகளும் நன்கு வளர்ந்திருக்கின்றன. கூடுதலாக 2 ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்புக்காக குளம் வெட்டி இருக்கிறேன். குளத்தைச் சுற்றி 150 தென்னங்கன்று வைத்திருக்கிறேன். அவை காய்க்கத் தொடங்கி விட்டன.

கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும். இப்போது 280 அடிக்கும் கீழாக நிலத்தடி நீர் போய்விட்டது. இருந்தாலும் ஸ்பிரிங்க்ளர் மூலமாக அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். தண்ணீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் முறையைத்தான் இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறேன். குளம் வெட்டும்போது கிடைத்த மண்ணைக்கொண்டு கரை அமைத்தேன். கரையில் தென்னையோடு மா, செம்மரம், வேங்கை உள்ளிட்ட மரங்களையும் வளர்த்து வருகிறேன்.கஜா புயலில் தென்னந்தோப்பில் இருந்த பல மரங்கள் விழுந்துவிட்டன. இதற்கு மாற்றுப் பயிராக சிலவற்றை சாகுபடி செய்யலாம் என முடிவெடுத்தேன். அவற்றில் காய்கறி, பூ வகைகளைப் பயிரிட வேண்டும் என்றால் அவற்றைக் கவனித்து கொள்ள கூடுதலாக ஆட்கள் தேவைப்படும் என்பதால் சில மாற்றங்களைச் செய்தேன். அதிக பராமரிப்பு இல்லாமல் வளரக்கூடிய பயிர்களில் உளுந்தும் ஒன்று என்பதால், மரங்கள் விழுந்த இடங்களில் உளுந்து விதைத்து இருக்கிறேன். இதேபோல் எள்ளும் பயிரிட்டு இருக்கிறேன். இரண்டு பயிர்களும் தற்போது அறுவடைக்குத் தயார். இங்கு தென்னை பயிரிடலாம் என்றும் முடிவு செய்திருக்கிறேன். இதற்குத் தேவையான கன்றுகளை வெளியில் இருந்து வாங்காமல் நானே உற்பத்தி செய்திருக்கிறேன். இதனால் கன்று வாங்கும் செலவு பெரியளவில் மிச்சமாகி இருக்கிறது.

குளத்தில் கொடுவா மற்றும் கெண்டை மீன்களை வளர்த்து வருகிறேன். அரை கிலோ வளர்ந்த மீனுக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் மிதப்புத் தீவனம் தேவைப்படும். இதுபோக நிலத்தில் விளையும் புற்கள், முட்டைக்கோஸ் உள்ளிட்டவற்றை நறுக்கி தீவனமாக போடுவோம். குளத்தில் கோ3, கோ5, சூபாபுல் போன்றவற்றையும் வளர்த்து வருகிறேன். மீன்கள் உண்டது போக மீதமாகும் புற்கள் தண்ணீரில் அழுகிவிடும். இந்தக் குளத்தில் இருக்கும் தண்ணீரை மரங்களுக்கு பாய்ச்சுகிறோம். தண்ணீரில் மீன்களின் கழிவுகள், அழுகிய புற்கள் இருப்பதால் மரங்களுக்கு சிறப்பான உரமாக செயல்படுகின்றன. இதனாலும் மகசூலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு சீசனுக்கும் 500 கிலோ கெண்டை மீன்களை விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ கெண்டை மீனை கடந்த மாதம் ரூ.170 என விற்பனை செய்தேன். இதன்மூலம் ரூ.85 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இதில் பராமரிப்பு செலவு ரூ.5 ஆயிரம் போக ரூ.80 ஆயிரம் லாபம் கிடைத்தது. கொடுவா மீனை இப்போதுதான் வளர்ப்புக்கு விட்டிருக்கிறேன். அவை வளர்ந்தபிறகு விற்பனை செய்வேன்.

நிலத்தில் குமிழ் மரங்களையும் வளர்த்து வருகிறேன். ஒரு மரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் லாபம் கிடைக்கும். கிட்டதட்ட 800 மரங்களுக்கு மேல் இருக்கிறது. அனைத்து மரங்களும் செழிப்பாக வளர்ந்து இருக்கின்றன. அறுவடை செய்து விற்கும்போது கண்டிப்பாக நல்ல லாபம் கிடைக்கும். கஜா புயலில் விழுந்த தேக்கு மரங்களை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். அதுபோக 700 மரங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. பலா சீசனில் பழங்களை விற்பனை செய்ததில் ரூ.25 ஆயிரம் கிடைத்தது. உளுந்து அறுவடையில் 625 கிலோ மகசூல் கிடைத்தது. ஒரு கிலோ உளுந்து ரூ.70 என விற்பனை செய்தேன். இதன்மூலம் ரூ.43750 வருமானமாக கிடைத்தது. இதில் பராமரிப்பு செலவு, வேலையாட்கள் கூலி ரூ.6500 போக ரூ.37,250 லாபமாக கிடைத்தது. இந்த ஆண்டு எலுமிச்சையில் 7 டன் மகசூல் கிடைத்தது. ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.100 என விற்பனை செய்தேன். எலுமிச்சையில் மட்டும் ரூ.7 லட்சம் வருமானம் கிடைத்தது. செலவுகள் ரூ.65 ஆயிரம் போக ரூ.6.35 லட்சம் லாபம் கிடைத்தது. தென்னையில் ஒரு வெட்டுக்கு 3 ஆயிரம் தேங்காய் கிடைக்கிறது. இதில் ஒரு காய் ரூ.13 என விற்பனை செய்கிறேன். இதிலிருந்து ரூ.39 ஆயிரம் கிடைக்கிறது. பசுமாட்டுப் பாலையும் விற்பனை செய்கிறேன். இதில் ஒரு மாதத்திற்கு ரூ.6300 கிடைக்கிறது. பண்ணையில் வளரும் கோழிகளையும் அவ்வப்போது விற்பனை செய்கிறேன். இதிலும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். நமக்குச் சொந்தமான நிலத்தை விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்ற வேண்டும். இதன்மூலம் நாம் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும். ஒரு பயிர் நம்மை கைவிட்டாலும் மற்றொரு பயிர் நமக்கு வருமானத்தைக் கொடுக்கும்” என நம்பிக்கையோடு பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
ரவிச்சந்திரன்: 72003 21686.

The post மீன்,கோழி,மாடு,மரங்கள்… appeared first on Dinakaran.

Read Entire Article