மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

2 months ago 21

சென்னை,

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து IND-TN-10-MM-411 மற்றும் IND-TN-10-MM-544 பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இன்று நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இந்த சிக்கலான பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 27.09.2024 அன்று இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Entire Article