மீன ராசியினர், ஆழமாகக் காதலித்துத் திருமண வாழ்க்கையைப் பரிபூரணமாக அனுபவிக்கின்ற பாக்கியம் பெற்றவர்கள். போகக்காரகனாகிய குரு இவர்கள் ராசி அதிபதியாக இருப்பதாலும், காதலுக்குரிய சுக்கிரன் இந்த ராசியில் உச்சம் பெறுவதாலும், இவர்களுக்குள் காதலும் காமமும் எல்லா வயதிலும் நிறைந்திருக்கும். இவர்களின் காதல் ஆழமாகவும் அழகாகவும் இருக்கும்.
அது ஆர்ப்பாட்டம் இல்லாத உற்சாகமான கிளர்ச்சியான காதல். மீன ராசியினரின் தாம்பத்தியம் காதலும் காமமும் பின்னிப் பிணைந்ததாக இருக்கும். இவர்கள் தன் காதலி அல்லது மனைவிக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்து அவர்கள் விரும்பும் படி எல்லாம் தன்னை தகவமைத்துக் கொள்வார்கள். மாற்றிக் கொள்வார்கள். அறிவாலும் அழகாலும் உணர்ச்சியாலும் ஆத்மாவாலும் இணைந்து காதலும் காமமும் கலந்து உறவாடி வாழ்க்கை நடத்துவார்கள்.
பொருந்தக்கூடிய ராசிகள்
மீனராசிக்காரர் பொதுவாக பொறுமையும் நிதானமும் அன்பும் ஆர்வமும் கொண்டவர் என்பதால், எந்த ராசிக்கும் அவர் பொருந்திப்போவார். இருந்தாலும், இவருடைய ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் பொருந்துகின்ற ராசி என்றால் இவருடைய ராசியையே முதலில் கூறலாம். மேஷத்துக்கு மேஷம் விருச்சிகத்துக்கு விருச்சிகம் பொருந்தாது. ஆனால் மீனத்துக்கு மீனம் மிக அழகாக பொருந்தும். மீனம், நீர் ராசி என்பதால், கடகம் விருச்சிகம் போன்ற ராசிகள் பொருந்திப் போகும்.
காதல் தோல்விகள்
மீனராசியினர் அடிக்கடி காதல் தோல்விகளைச் சந்திப்பதுண்டு. இவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு மாறாக அவர்களுடைய காதலர் இருந்தால், பேசி புரியவைத்து காதலைத் தொடர மாட்டார்கள். உடனே பயந்து கொண்டு விலகிவிடுவார்கள். இதனால் இவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் வரை காதலிப்பவரைத்தான் திருமணம் செய்வாரா என்பது நிச்சயம் கிடையாது. இரண்டு மூன்று காதல் (பிரேக் அப்) தோல்விகூட ஏற்பட வாய்ப்புண்டு.
கற்பனை அதிகம்
மீனராசியினர் கற்பனையில் தனக்குள்ளேயே, தான் விரும்பிய வரை அவரிடம் சொல்லாமலேயே காதலித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஒரு தலைக் காதல் அனுபவங்கள் நிறைய இருக்கும். இவர்களுக்கு mood swing அதிகம். ஒரு நேரம் இருக்கும் குணம் மறு நேரம் இருக்காது. ஒரு நாள், தான் காதலித்த பெண்ணிடம் போய் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். மறுநாள் அவள் மறுத்துவிட்டால் அந்த ஏமாற்றத்தை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்து போய் சொல்லமாட்டார்கள். இதற்கிடையே அந்த பெண் வேறொருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு போய்விடுவாள்.
காதலியா? தோழியா?
மீனராசியினர் சில வேளைகளில் தைரியமாக அவள் அருகில் சொல்லப் போய்விட்டு, பிறகு சொல்லாமல் வெறும் நண்பர் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. மனம் நிறைய காதல் பொங்கி வழிந்தாலும், அதைப் பிறர் அறியாமல் மறைக்கும் திறமை இவர்களுக்கு உண்டு. மனதுக்குள் காதலித்துக்கொண்டு வெளியே தோழி என்று சொல்வார்கள். மீனராசிக்காரரின் காதல் வெற்றி பெற வேண்டும் என்றால், இவருக்கு ஒரு நல்ல நண்பர் அல்லது தோழி வேண்டும். சிலருக்கு இவருடைய மனதுக்குள் இவர் ரகசியமாக காதலித்த காதலியே இவர் தோழி என்று சொன்னதால் இவருடைய இன்னொரு காதலுக்கு உதவி செய்து அந்த காதலை வெற்றி பெற வைப்பாள்.
கல்யாணம் ஆன பின்பு
திருமண வாழ்க்கையில் மீன ராசிக்காரர்கள் 90 சதவீதம் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஏனெனில் இவர்களுடைய பொறுமையும் நிதானமும் இவர்கள் தன் மனைவிக்கு வழங்கும் சுதந்திரமும் இவர்களுக்கு முழு வெற்றியைத் தரும். மீன ராசிக்காரரைக் காதலிப்பது வாழ்வின் பெரு வரம். அவரைத் திருமணம் செய்துகொள்வது முன் ஜென்ம புண்ணியம்.
சொல்லின் செல்வர்
மீன ராசிக்காரர்கள் பேசத் தெரியாதவர்கள் அல்ல, பேசத் துணியாதவர்கள். இவர்கள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதுபோல சுவையாக பேசுவார்கள். காதல் பிரசங்கம் செய்வார்கள். ஆனால் பேசும் துணிச்சல் இவர்களுக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். திருமணம் செய்த பின்பு இவர்களுடைய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தங்கள் மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்தேகப்பட மாட்டார்கள். தனக்குரிய சுதந்திரத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளும் அதே வேளையில் மனைவிக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பார்கள். மனைவி எடுத்த முடிவுகளில் இவர்கள் தலையிடுவதில்லை. அவருடைய முடிவுகளுக்கு முழு அங்கீகாரம் வழங்குவர்.
தலையணை மந்திரம்
மீனராசியினர் மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்கின்றவர்கள். இவர்களிடம் தலையணை மந்திரம் நன்றாகப் பலிக்கும். பலன் தரும். மீன ராசிக்காரர்களின் மனைவிமார் அல்லது கணவன்மார் இரவில் படுக்கையறையில் எதைச் சொன்னாலும் அது தெய்வ வாக்காக அவர்கள் மனதில் பதிந்துவிடும். ஹாலில் அமர்ந்து மீன ராசி கணவன் அல்லது மனைவியிடம் பேசுவதைவிட பெட்ரூமில் இருந்து பேசுவது உடனடி பலனைத் தரும்.
சின்ன சின்ன ஆசை
மீன ராசிக்காரருக்கு ரொமான்ஸில் அதிக விருப்பம், அதீத விருப்பம் உண்டு. சின்ன சின்ன ரொமான்ஸ் செய்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். இவருடைய காதலர் அல்லது காதலி, கணவன் அல்லது மனைவி இவருக்கு அடிக்கடி முத்தங்களைப் பரிசாக அளிக்க வேண்டும். போனில் காதல் மெசேஜ்கள் அனுப்ப வேண்டும். திடீரென்று எதிர்பாராத வகையில் பரிசுகள் கொடுக்க வேண்டும். கடுமையான பணிப்பளுவுக்கு இடையில் கனிவான காதல் வார்த்தைகள் ஒன்று இரண்டு உதிர்த்துச் செல்ல வேண்டும். இவை அவருக்கு பாலைவனத்து ரோஜாக்கள் போல உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பையும் உடலில் ஒரு கிளர்ச்சியையும் தூண்டும்.
காம விளையாட்டுகளில் கைதேர்ந்த மீன ராசிக்கார ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையும் தனக்கு ஈடு கொடுத்து தங்களை மகிழ்விக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். இரவு இவர்களுக்கு மோகனமான ரம்மியமான இரவாக இருக்க வேண்டும். நறு மலர்கள், நல்ல வாசனை, இனிய கீதம், மெல்லிசை, மனதைக் கவரும் வண்ணங்களில் படுக்கை விரிப்பு போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்.
எனவே மீனராசிக்காரரை காதலிக்கும் அல்லது திருமணம் செய்து கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும் அவர்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஆசைகளை நுட்பமாக அறிந்து கொண்டு (நேரடியாக கேட்டால் எதுவும் சொல்ல மாட்டார்) அவர்களுக்கு மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் பரிசாக வழங்குங்கள்.
The post மீனராசியினர் காதலில் கெட்டிக்காரர்கள் appeared first on Dinakaran.