மீண்டும் வெடித்த பிரிஜ் பூஷன் விவகாரம்.. முன்னாள் மல்யுத்த வீராங்கனை பகீர் தகவல்

3 weeks ago 14

புதுடெல்லி,

முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது சில மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சர்ச்சை எதிரொலியாக மல்யுத்த சம்மேளனத்தின் பணிகளில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆறு முறை பாஜக எம்.பி.யாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சாக்ஷி மாலிக் உள்பட உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து அவர் ஒதுங்க வேண்டியிருந்தது.

இதனை தொடர்ந்து அவருடைய ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக வெற்றி பெற்றார். அவர் தலைமைப் பதவிக்கு வந்த சிறிது நேரத்திலேயே, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், மல்யுத்த வீராங்கனையுமான சாக்ஷி மாலிக், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விளையாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி மாலிக் தனது சுயசரிதை புத்தகத்தில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், கஜகஸ்தானின் அல்மத்தி நகரில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின்போது, என்னுடைய பெற்றோரிடம் செல்போனில் பேசுவதற்காக, பிரிஜ் பூஷன் சரண் சிங் என்னை அவரது ஓட்டல் அறைக்கு வரச் சொன்னார்.

அதன்படி, நானும் சென்றேன். அங்கு என்னுடைய பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்து என்னிடம் கொடுத்தார். நானும் போட்டியில் நடந்த சம்பவம் மற்றும் பதக்கம் குறித்து விவரித்தேன். பின்னர், அழைப்பை துண்டித்த பிறகு, என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே அவரை தள்ளிவிட்டு, சத்தமாக அழத் தொடங்கினேன். பின்னர், அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிஜ் பூஷன் அதிகாரமிக்க நபர் என்பதாலும், அவர் நினைத்தால் தன்னுடைய மல்யுத்த வாழ்க்கையையே முடித்து விட முடியும் என்பதால், இதனை வெளியே சொல்லாமல் இருந்ததாகவும் அவர் அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.

சாக்சி மாலிக்கின் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.

Read Entire Article