*விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
குன்னூர் : கனமழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மழைநீர் மற்றும் மண் குவியல் நேற்று புகுந்து, பள்ளி முழுவதும் சேதமடைந்தது. குறிப்பாக கழிவுநீர் செல்லும் கால்வாயில் பாறைகள் அடைத்துள்ளதால், கழிவு நீரும், மழைநீரும் பள்ளி வளாகத்தில் சூழ்ந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குறிப்பாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சிக்னல் இல்லாததால் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க காலதாமதம் ஆனது. நீண்ட நேரத்திற்கு பிறகு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சீரமைக்கும் பணியில் வருவாய்த்துறையினரும், ஊராட்சி நிர்வாகத்தினரும் இணைந்து ஈடுபட்டனர். இதேபோல் கடந்த மாதம் 8-ம் தேதி இதே பள்ளியில் மழைநீரும், மண் குவியலும் புகுந்தது.
இதற்கிடையே பள்ளிக்கு மேற்புறம் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அதிகாரிகள் மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யாததே பாதிப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
எனவே பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.நேற்று இரவு முதல் குன்னூர், அருவங்காடு, வண்டிச்சோலை, காட்டேரி, எடப்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், குன்னூரில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில், சமுதாயக்கூடத்திற்கு முன்புறம் உள்ள சாலையின் ஒரு பகுதி மழையால் அடித்து செல்லப்பட்டது.
பாரத் நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும், சாலைகளிலும் மண் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணிகளை துரிதபடுத்தினர்.
வண்டிச்சோலை அருகே எமகுண்டு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதுடன், சாலையோரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதை தொடர்ந்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
The post மீண்டும் பர்லியார் ஊராட்சி பள்ளியில் புகுந்த மழைநீர் appeared first on Dinakaran.